இந்தியா வரும் மியான்மர் மக்களுக்கு கட்டணமில்லாமல் விசா: மோடி
பிரதமர் மோடி சீனாவில் இருந்து மூன்று நாள் அரசு பயணமாக நேற்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு, மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை இன்று சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இந்தியா - மியான்மர் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அப்போது, பிரதமர் மோடி மற்றும் ஆங் சான் சூகி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வரும் மியான்மர் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி கட்டணமில்லாமல் விசா வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்திய சிறைகளில் இருக்கும் மியான்மர் நாட்டை சேர்ந்த 40 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அங்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் நடைபெற்றுவரும் மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரின் வளர்ச்சிக்கும் இருநாடுகளின் கூட்டுறவுக்கும் இந்தியா தொடர்ந்து பாடுபடும் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.