பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் கடந்த வாரம் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலைத் தொடர்ந்து 'பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.


'பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகள் போல் நம் ராணுவமும் தாக்குதல்களை நடத்த வேண்டும்' என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேலின் துாதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரி ரான் மால்கா புல்வாமா விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்... "பயங்கரவாதத்துக்கு எதிராக மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகள் உலகெங்கும் பாராட்டை பெற்றன. பயங்கரவாதம் என்பது இந்தியா, இஸ்ரேலின் பிரச்னை மட்டுமல்ல; உலகளாவிய பிரச்னை. இந்தப் பிரச்னையில் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.


தங்கள் நாட்டைப் பாதுகாக்கவும் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. அவ்வாறு இந்தியா எடுக்கும் அனைத்தும் நடவடிக்கைகளுக்கும் மிகச் சிறந்த நட்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் முழு ஆதரவு அளிக்கும். தேவைப்பட்டால் முழு ஒத்துழைப்பையும் அளிக்கும்" என தெரிவித்துள்ளார்.