இந்தோனேசியவின் அதிபராக ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வார கணக்கில் நீடித்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது வெளியான தேர்தல் முடிவுகளின் படி 57-வயதாகும் ஜோகோ விடோடா மீண்டும் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


நடந்து முடிந்த தேர்தலில் விடோடோவிற்கு 55.5% வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5% வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.


முன்னதாக, நடைப்பெற்ற தேர்தலில் மோசடி நடவடிக்கைகள் அதிகம் இடம்பெற்றதாக பிரபாவோ குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் காரணமாக, அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தகவல் வெளியானது.


எனினும் பிரபாவோவும் அவருடைய ஆதரவாளர்களும் அத்தகைய நடவடிக்கைகளில் இதுவரை ஈடுபடுவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எனினும், பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.