டொனால்டு டிரம்ப் உத்தரவை நீதிமன்றம் நிறுத்தியது
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20-ம் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
நியூயார்க்: அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20-ம் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவோரை தடுக்க 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்ப உத்தரவிட்டுள்ளார். அதற்கு மெக்சிகோ பணம் தர மறுப்பதால், அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது 20 சதவீத கூடுதல் வரி விதிக்க முடிவு எடுத்துள்ளார்.
இதற்க்கு அடுத்த அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்தார்.
சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை போட்டுள்ளார். அதாவது, அடுத்த அறிவிப்பு வரும் வரையில் சிரியா அகதிகள், அமெரிக்காவில் நுழைய முடியாது. அடுத்து, ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த நாடுகளைப் பொறுத்தமட்டில் தூதரக ரீதியிலான ‘ராஜ்ய விசா’ மட்டும் தொடர்ந்து வழங்கப்படும். மற்றபடி தனி நபர்களுக்கு விசா வழங்கப்படாது என்று குறிப்பிட்டார்.
டொனால்டு டிரம்ப் தடை விதித்த 7 நாட்களில் இருந்து முறையாக விசா பெற்று அமெரிக்காவிற்கு பிரவேசிக்க இருந்த பயணிகளையும் பெரிதும் பாதித்தது. இதற்கிடையே அமெரிக்காவில் டிரம்ப் உத்தரவிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த தொடங்கினர்.
டிரம்பின் அதிரடி உத்தரவு தொடர்பான விவகாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் கிழக்கு மாவட்ட நீதிமன்றம் முன்னதாக சென்றது. இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அன் டொனேலே டொனால்டு டிரம்பின் தடை உத்தரவை நிறுத்தி உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க விமான நிலையங்களில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் அகதிகளை வெளியேற்றும் பணியை நிறுத்துமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.