காபூல் இராணுவ முகாம் தாக்குதல்: 4 பயங்கரவாதிகள் பலி!!
காபூலில் இராணுவ அகாடமியில் தாக்குதல் நடத்தியதில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு, ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தேசிய ராணுவ பல்கலை கழகம் மீது இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இராணுவ படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், 5 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தனர். மேலும், 10 வீரர் காயமடைந்தனர்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐரோப்பிய யூனியன் அலுவலகம், அமைதி ஆணையம், உள்நாட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகம் நிறைந்த மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காபூல் நகரில் அமைந்துள்ள மார்ஷல் பாகிம் தேசிய ராணுவ பல்கலை கழகத்தில் இன்று காலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர். எனினும், அவர்களால் பல்கலை கழகத்திற்குள் நுழைய முடியவில்லை.
இந்த சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேலும்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்கான்டினென்டல் உணவகத்தில் கடந்த 20-ம் தேதி ஆயுதம் தாங்கிய தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது மீண்டும் காபூலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது அப்புகுதி மக்களிடேயே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது!