அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவி வகித்து வரும் ஜோ பைடன், வாஷிங்டன்னில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, அவருக்கு கொலோனோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனைக்காக பைடனுக்கு மயக்க மருந்து செலுத்த வேண்டியிருந்ததால், அந்த நேரத்தில் அவரின் அதிகாரங்கள் துணை அதிபரான கமலா ஹாரீஸூக்கு மாற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட வெள்ளை மாளிகை, பைடன் மருத்துவ பரிசோதனைகள் முடியும் வரை துணை அதிபர் அதிபராக இருப்பார் எனத் தெரிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பை கமலா ஹாரீஸ் பெற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

85 நிமிடங்கள் அதிபர் பதவியில் இருந்த கமலா ஹாரீஸ் (Kamala Harris), குறுகிய காலம் அமெரிக்க அதிபராக இருந்த பெண் என்ற அந்தஸ்தும் அவருக்கு கிடைத்தது. பைடன் (Joe Biden) மயக்க நிலையில் இருந்து தெளிந்தவுடன், அவருக்கான அதிகாரம் மீண்டும் அவர் வசமே ஒப்படைக்கப்பட்டன. அதிபர் பதவி கிடைத்த சமயத்தில் கமலா ஹாரீஸ் வெள்ளை மாளிகையில் இருந்துள்ளார். அப்போது, அதிபருக்கான அறைக்கு செல்லாமல், தன் அறையில் இருந்தவாறே அதிபர் பணிகளை மேற்கொண்டுள்ளார். பைடனுக்கான மருத்துவ பரிசோதனை குறித்து பேசிய மருத்துவர், முழு உடல் பரிசோதனைக்குப் பிறகு பைடன் நலமாக இருப்பதாக தெரிவித்தார். 


குடலில் சிறு திசு வளர்ச்சி இருந்ததாகவும், அதனை முறையான சிகிச்சை மூலம் அகற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். சிகிச்சைகளை முடித்துக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பிய பைடன், வழக்கமான அதிபர் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான அதிகாரங்களை மாற்றிக் கொள்ளும் நடைமுறை அந்நாட்டின் அரசமைப்பு சட்டத்திலேயே உள்ளது. இதற்கு முன்பு ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த நேரத்தில், 2005 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் இருமுறை அதிபருக்கான அதிகாரம் துணை அதிபருக்கு மாற்றப்பட்டுள்ளது. புஷ் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அவருக்கான அதிகாரம் துணை அதிபருக்கு வழங்கப்பட்டது. அதுமாதிரியான நடைமுறை இப்போது நிகழ்ந்துள்ளது. 


ஆனால், பெண் ஒருவருக்கு அதிகாரம் மாற்றப்பட்டது இதுவே முதன்முறையாகும். கமலா ஹாரீஸ், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரின் உறவினர்கள் இன்றும் சென்னை மற்றும் டெல்லியில் வசித்து வருகின்றனர். அதிபர் பைடனுக்கும், கமலா ஹாரீஸூக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் கமலா ஹாரீஸூக்கு அதிகாரம் மாற்றப்பட்டு, மீண்டும் பைடன் வசமே ஒப்படைக்கப்பட்டது அரசியல் ரீதியாகவும் அந்நாட்டில் உற்றுநோக்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR