லண்டன் தீவிரவாத தாக்குதல்: 6 பலி, 30 பேர் காயம்!
லண்டன் பாலத்தில் வேன் தாறுமாறாக ஓடி 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் கானமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
உலக புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.
காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் பணியையும், தாக்குதல்தாரிகளை வேட்டையாடும் பணியையும் லண்டன் போலீஸ் துரிதமாக செய்தது.
தாக்குதல்தாரிகள் மூன்று பேரையும் லண்டன் போலீஸ் சுட்டுக் கொன்றது. தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படுவதாக லண்டன் போலீஸ் தெரிவித்து உள்ளது.
லண்டன் பிரிட்ஜ் பகுதியில் தாக்குதல்தாரிகளால் பொதுமக்களில் 6 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என போலீஸ் தெரிவித்து உள்ளது.
தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் தைரியமாக செயல்பட்டது. போலீஸ் நடத்திய மூன்று ஆண் தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டனர் என பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரி மார்க் ரோவ்லே கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் தங்களுடைய உடலில் வெடிகுண்டுகளை கட்டியவாறு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர், ஆனால் அவை போலியானவை என பின்னர் தெரியவந்து உள்ளது.
இதற்கிடையே தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்டோரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக ஆம்புலன்ஸ் சர்வீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நடந்த தற்கொலை தாக்குதல் ஒன்றில் 30 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரிட்டனில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் அடுத்தடுத்த பயங்கரவாத தாக்குதலானது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.