லண்டனில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை தாக்க முயற்சி -வீடியோ
ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை பெற்றுள்ள பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை லண்டனில் தாக்க முயற்சி.
லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கி குவித்துள்ளதாக பனாமா ஆவணத்தில் செய்தி வெளியானதை அடுத்து, அவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக பாக்கிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை 6 ஆம் தேதி, நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் என்பது லட்சம் பவுண்ட் அபராதமும், அவரது மகள் மரியம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் இருபது லட்சம் பவுண்ட் அபராதமும் விதித்தது. மேலும் நவாஸ் ஷெரீஃப்பின் மகள் மரியம் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், லண்டனில் தனது அன்ஃபீல்ட் ஹவுஸில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது இளைஞர்கள் கூட்டம் ஒன்று, நவாஸ் ஷெரீஃப்பை தாக்க முயன்றுள்ளது. அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி உள்ளனர். அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற நவாஸ் ஷெரீஃப்பின் பாதுகாவலர்கள் மீது அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுக்குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவத்தை அடுத்து உள்ளூர் போலீசார் விரைவில் நடவடிக்கை எடுத்த போதிலும், இதுக்குறித்து ஷெரிப் குடும்பத்தினர் எந்த புகாரும் பதிவு செய்யாததால், அவர்கள் கைது செய்யவில்லை.
இந்த சம்பவத்திற்கு குறித்து பதில் அளித்த நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியாம் நவாஸ், இதற்க்கு காரணம் முன்னால் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் தலைமையிலான பாக்கிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தான் எனக் குற்றம் சாட்டினார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இம்ரான் கானின் கட்சியில், அதன் தலைவர் மற்றும் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்படும் "பயிற்சி" வகைகளை காட்டியது என்று கூறினார்.
ஆனால் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் இதனை மறுத்து உள்ளதாக பாக்கிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் டவன் நியூஸ் இங்கிலாந்து பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் மரியாம் நவாஸ் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது உள்ளதாகவும், மேலும் கட்சியின் எந்த உறுப்பினரும் தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.