அபுதாபி இந்து கோயில்... ஒரே நாளில் 65,000 பேர் தரிசனம்..!
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் கோவிலுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் (Abhu Dhabi Hindu Temple) வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் கோவிலுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கோயில் நிர்வாகத்தினர் இது குறித்து கூறுகையில், கோயில் நடை திறக்கப்பட்ட உடனேயே பேருந்துகள் மற்றும் வாகனங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தடைந்தனர் என்றும், மாலையிலும் சுமார் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர் எனவும் தெரிவித்தனர். கூட்டம் அதிகமாக இருந்த போதிலும், கோவிலுக்கு வந்த பக்தர்கள், எந்தவித இடையூறும் இன்றி, தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்களும், எந்த விதமான பிரச்சனையும் இன்றி, கூட்டம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு, நல்ல முறையில் தரிசனம் செய்ய முடிந்ததாக குறிப்பிட்டனர்.
அபுதாபியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, லண்டன், அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இருந்தும் பலர் தரிசனம் செய்ய வந்திருந்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்களில் பலர், இந்த தருணத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் அபுதாபி இந்து கோயில் தங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் தாண்டி அற்புதமாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டனர். இங்கு வந்து பிரார்த்தனை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதை பாக்கியமாக கருதுகிறோம் என்றும் குறிப்பிட்டனர்.
முன்னதாக அபுதாபி இந்து கோயில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மக்களுக்காக திறந்திருக்கும் என்று போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா அமைப்பு கூறியிருந்தது. மேலும் கோயிலுக்கு வருபவர்கள் பின்பற்ற வெண்டிய விதிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வெளியிட்டிருந்தது.
மேலும் படிக்க | அபுதாபி இந்து கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி.. ஆனால் சில விதிமுறைகள் உண்டு
கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடலை மூடும்படியான உடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொப்பிகள், பிறர் மனதை புண்படுத்தும் வடிவமைப்பு கொண்ட பிற ஆடைகள் அனுமதிக்கப்படாது எனவும் கூறியிருந்தது. மேலும் ஒளிஊடுருவக்கூடிய அல்லது இறுக்கமான உடைகளுக்கும் அனுமதி இல்லை என கூறப்பட்டது. கவனத்தை சிதறடிக்கும் சத்தம் அல்லது பிரதிபலிப்பை ஏற்படுத்தும் ஆடை மற்றும் ஆபரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோவிலின் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளன.
கோயிலின் சிறப்பு அம்சங்கள்
பழங்கால கட்டுமான முறைப்படி கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கட்டுமானத்தினை அனைவரும் கண்டு ரசித்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கோயில் கட்டுமானத்திற்கான நிலத்தை வழங்கியிருந்தது. ஏறக்குறைய 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கோயில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு நாடுகளை குறிக்கும் வகையில், கோவில் ஏழு கோபுரங்களைக் கொண்டுள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கோவிலில், உள்ள சிற்ப வேறுபாடுகள் கன்களையும், மனதையும் கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளன. ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல் கற்களால் ஆன வேலைப்பாடுகள், பளிங்கு கற்களால் ஆன வேலைப்பாடுகள் என கோவில் மிகப்பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த கோவிலில், ஸ்ரீராமர், விநாயகப் பெருமான், ஐயப்பன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, தனது அபுதாபி பயணத்தின் போது, பிப்ரவரி 14 அன்று திறந்து வைத்தார்.
மேலும் படிக்க | அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ