ஆஸ்திரேலியாவில் கடுமையான ஆலங்கட்டி புயலில் இருந்து போராடி தனது குழந்தையை துணிச்சலாகக் காப்பாற்றிய தாயின் தைரியத்தை சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான புயல் தாக்கும் என ஏற்கெனவே அந்நாட்டு வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று ஆஸ்திரேலியாவின் பல மாகாணங்களில் புயல் தாக்கியது. அதிலும் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை வெளுத்துவாங்கியுள்ளது. கடும் புயலின் காரணமாக விவசாய நிலங்கள், வீடுகள் பலத்த சேதமடைந்தன. மணிக்கு 144 கிமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியுள்ளது. 


குயின்ஸ்லேண்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஃபியோனா சிம்ப்சன் என்பவர் புயலின்போது தன் குழந்தையுடன் காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆலங்கட்டி மழையால் கார் கண்ணாடி உடைந்துவிட குழந்தையுடன் சிக்கிக்கொண்டார் சிம்ப்சன். 


ஆலங்கட்டி மழையில் சிக்கியதால் செய்வதறியாமல் திகைத்த அவர், தனது உடலை இரும்பாக்கி குழந்தையைக் காப்பாற்றியுள்ளார். ஆலங்கட்டி மழையால் அவரது முதுகுப் பகுதி, முகம்  என உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்பு வீட்டுக்கு வந்த அவர், சமூக வலைதளங்களில் இது குறித்துப் பதிவிட்டுள்ளார். 


அந்த ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ``இன்று ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்டுள்ளேன். இனி புயல் சமயங்களில் வெளியே செல்ல மாட்டேன். இனிமேல் அனைவரும் புயல் சமயங்களில் கவனமாக இருங்கள்" எனக் கூறி காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய அந்தத் தாய்க்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.