இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தை பயன்படுத்தி 1200 கைதிகள் தப்பி ஓட்டம்
இந்தோனேசியாவின் முக்கிய சிறைச்சாலைகளில் இருந்து தப்பித்த கைதிகள்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000-க்கு அதிகமாக ஆக அதிகரித்து உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல இடங்களில் இறந்தவர்களின் உடல்கள் சாலைகளில் சிதறிக் கிடக்கின்றன. இதனால் தொற்றுநோய் பிரச்சினை ஏற்ப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இது ஒரு பக்கத்தில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தினாலும், சிலருக்கு இந்த சுனாமி மற்றும் பூகம்பங்கள் ஒரு ஆசீர்வாதமாக அமைந்துள்ளது. இயற்கை பேரழிவான நிலநடுக்கத்தால் மூன்று பகுதியில் சிறைசலையின் சுவர்கள் இடிந்து விழுந்ததால், இதைப்பயன்படுத்தி சுமார் 1200 கைதிகள் தப்பி ஓடி உள்ளனர்.
இந்த சம்பவத்தை இந்தோனேசிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் அதிகாரபூர்வ அறிக்கையின்படி, அதிக அளவில் பாலு நகரில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதால், அங்கு இருந்த சிறை சுவர்கள் விழுந்ததில், கைதிகளை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தப்பித்து சென்றனர்.
இதுகுறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலால், சிறை சேதமடைந்தது. இதனால் கைதிகள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் நாங்களும் எச்சரித்தும், கைதிகள் கேட்காததால், கைதிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறியதால், அவர்களை கட்டுப்படுத்தக் கடினமாகி விட்டது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 2004-ல் ஏற்பட்ட சுனாமியில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.