இந்தியாவுடன் போரை விரும்பவில்லை நவாஸ் ஷெரீப்
எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் போரை விரும்பவில்லை என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மந்திரிசபையின் அவசர கூட்டத்தை பிரதமர் நவாஸ் ஷெரீப் கூட்டினார்.
நவாஸ் ஷெரீப் பேசியதாவது:- இந்தியாவின் அதிரடி தாக்குதல் விவகாரத்தில் அமைதியை உடைத்த நவாஸ் செரீப், இந்தியாவுடன் போரை விரும்பவில்லை என்று கூறியுள்ளார் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டு உள்ளது.எந்தவொரு தாக்குதலுக்கு எதிராகவும் நாம் நமது தாய்நாட்டை காப்போம். நமது பாதுகாப்பு படையினருடன் ஒட்டுமொத்த நாடும் தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறது. காஷ்மீர் பிரச்சனை முடிவுக்கு வராத விவகாரம். அதை அப்படியே விட்டு விட முடியாது. வறுமை, வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நாட்டின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சமாதானம் அவசியம், ஆனால் பகைமை என்று வருகிறபோது, நாடு பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் இந்தியா வலிய வந்து நடத்திய தாக்குதல், பிராந்திய அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எந்த வடிவத்தில் இந்தியாவில் ஆக்கிரமிப்பு வந்தாலும், அதை முறியடிப்பதற்கு தலைமையும், பாகிஸ்தான் மக்களும் ஒன்றுபட்டு நிற்கின்றனர் எனவும் கூறினார்.
பாகிஸ்தான் மந்திரிசபை கூறுகையில்:- பயங்கரவாதிகள் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்கள் நடத்தியதை என்பது ஏற்க கூடியது அல்ல. இந்தியா எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்தாகவும் கூறியது. இரு தரப்பு உடன்பாடுகள் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி, இந்தியா செயல்பட்டுள்ளதாக மந்திரிசபை குற்றம் சாட்டியது.