பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பான ஆவணங்களை, பனாமாவைச் சேர்ந்த சட்ட நிறுவனம் வெளியிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பிரதமர் பதவியில் இருந்து ஷெரீபை தகுதி நீக்கம் செய்து, கடந்த ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது. பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தின்படி, அரசு பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் கட்சித் தலைவர் பதவியில் இருக்க முடியாது. ஆனால், பிரதமர் பதவியை இழந்தாலும், கட்சித் தலைவர் பதவியில் ஷெரீப் நீடிக்கும் வகையில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 


இதையடுத்து, சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து, பாகிஸ்தான் தெக்ரி இ இன்சாஃப், அவாமி முஸ்லிம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீதான விசாரணை கடந்த மாதம் துவங்கியது. 


இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீபை தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவராக கடந்த 6 மாதங்களில் நவாஸ் ஷெரீப் மேற்கொண்ட முடிவுகள் செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.