PoK: பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் வலுக்கும் போராட்டம்... திணறும் பாகிஸ்தான்..!!
![PoK: பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் வலுக்கும் போராட்டம்... திணறும் பாகிஸ்தான்..!! PoK: பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் வலுக்கும் போராட்டம்... திணறும் பாகிஸ்தான்..!!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2024/05/14/395411-pok.jpg?itok=7FjE11El)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் நடத்தும் வன்முறை போராட்டங்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் நடத்தும் வன்முறை போராட்டங்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. மக்களை அமைதிபடுத்த ஷாபாஸ் ஷெரீப் (Shahbaz Sharif) அரசாங்கம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் PoK பகுதிக்குகான 23 பில்லியன் ரூபாய் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மின்சாரக் கட்டணம் மற்றும் பிரெட் விலையைக் குறைப்பதாகவும் உள்ளாட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. PoK பகுதியில் பகுதியில் வெள்ளிக்கிழமை முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து நான்காவது நாளாக திங்கள்கிழமையும் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முசாபராபாத் நோக்கி நீண்ட பேரணி நடத்திய போராட்டக்காரர்கள்
கடந்த நான்கு நாட்களாக, சமூக சேவகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வழக்கறிஞர்களால் அமைக்கப்பட்ட கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் வரி உயர்வுக்கு எதிராக தலைநகர் முசாபராபாத் நகருக்கு பேரணி மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. திங்களன்று கூட, லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் முசாபராபாத் நோக்கி நீண்ட பேரணி நடத்தினர். இந்த பேரணியை போலீசார் தடியடி நடத்தி தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, கூட்டத்தில் இருந்த ஒருவர் காவல் துறை எஸ்ஐ அட்னான் குரேஷியை சுட்டுக் கொன்றார். இந்த மோதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் காவல் துறையினர். இதுவரை இரண்டு போராட்டக்காரர்களும் உயிரிழந்துள்ளனர்.
PoK பகுதிக்கான 23 பில்லியன் பட்ஜெட்டுக்கு அரசு ஒப்புதல்
PoK பகுதியில் நான்காவது நாளாக இணையம் மற்றும் மொபைல் சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் திவீர ஆலோசனை நடத்தினார். திங்களன்று போராட்டக்காரர்களுக்கு அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் PoK பகுதிக்கான 23 பில்லியன் ரூபாய் பட்ஜெட்டுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்தார்.
பாகிஸ்தான் அரசு கூட்டிய சிறப்பு கூட்டம்
பிரதமர் ஷெரீப் திங்களன்று சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார், இதில் PoK பிரதமர் சவுத்ரி அன்வருல் ஹக், முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று பிரதமர் அலுவலகம் (PMO) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. PoK மக்களின் பிரச்சனைகளை தீர்க்க 23 பில்லியன் ரூபாய் பட்ஜெட்டுக்கு பிரதமர் ஷெரீப் ஒப்புதல் அளித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு நிலைமை குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.
PoK பகுதியில் பிரெட் விலை, மின்சாரக் கட்டணம் குறைப்பு
ஷாபாஸ் ஷெரீப்புடனான சந்திப்பு முடிந்தவுடன், PoK பிரதமர் ஹக் மின்சார கட்டணத்தை குறைப்பதாக அறிவித்தார். ஹக் கூறுகையில், கடந்த சில நாட்களாக உள்ளூர்வாசிகள் மின்சாரம் மற்றும் கோதுமை மாவுக்கு மானியம் தேவை என கோரி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மின்சாரம் கட்டணமும், கோதுமை மாவின் விலையையும் குறைப்பதாக அறிவித்தார்.
போராட்டத்தினால் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு
கோஹாலா-முசாபராபாத் சாலையை மறித்து போராட்டக்காரர்கள் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். 40 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை, கோஹாலா நகரத்தை PoK பகுதியில் உள்ள முசாஃபராபாத் உடன் இணைக்கிறது. முக்கிய சந்திப்புகள் மற்றும் பதற்றமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தைகள், வணிக மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, போக்குவரத்து சேவைகள் பாதிக்கபட்டுள்ளன.
சட்டத்தை கையில் எடுப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது: பிரதமர் ஷெரீப்
ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார், மேலும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மக்கள் நிதானத்தை கடைப்பிடிக்குமாறு பாகிஸ்தான் அதிபர் வேண்டுகோள்
பதட்டத்தைத் தணிக்க, மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பேச்சு வேண்டும் எனவும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வலியுறுத்தினார். அரசியல் கட்சிகளும், அரச நிறுவனங்களும், பிரதேச மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும், எதிரிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்த அதிபர், காவல் துறையினர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.
வன்முறை போராட்டங்கள் காரணமாக பள்ளிகள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டன
சனிக்கிழமையன்று, வன்முறை போராட்டக்காரர்கள் பூஞ்ச்-கோட்லி சாலையில் மாஜிஸ்திரேட் கார் உட்பட பல வாகனங்களை சேதப்படுத்தினர். இது தவிர, சந்தைகள், வணிக மையங்கள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் உணவகங்கள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. வன்முறைக்குப் பிறகு, முசாபராபாத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை பலரஒ கைது செய்தது. ஒரு நாள் முன்னதாக பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் மொபைல் போன் மற்றும் இணைய சேவைகளை அரசாங்கம் முடக்கியது. போராட்டத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ