பாகிஸ்தானின் மும்பை தாக்குதல் தளபதி ஹபீஸ் சயீத்தின் JuD&FIF குழுவினர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் 164 பேர் பலியாகக் காரணமான தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என இந்தியாவால் குற்றம் சாட்டப்படும் நபரான ஹபீஸ் சையது தலைமை வகிக்கும் இயக்கங்களை, தீவிரவாத அமைப்புகளுக்கான பட்டியலில் இருந்து பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது. 


அந்நாட்டுப் புதிய பிரதமர் இம்ரான் கானின் ஒப்புதலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஹபீஸ் சையது ஆதரவுடன் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டதாகவும், அதில் சிலர் வெற்றி பெற்றதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
 
இந்நிலையில், ஐ.நா. விதிமுறைகளின்படி தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களின் புதிய பட்டியலை பாகிஸ்தான் அரசு கடந்த மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 66 இயக்கங்கள் தீவிரவாத அமைப்புகளாக பட்டியலிடப்பட்டுள்ள போதிலும், ஹபீஸ் சையதின் ஜமாத்-உத்-தவா மற்றும் பலாஹ்-இ-இன்சானியாத் ஆகிய இயக்கங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.


கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கடல் மார்க்கமாக மும்பை மாநகருக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள், ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட முக்கியமான பொது இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் உள்நாட்டு மக்கள், வெளிநாட்டினர் உள்பட 164 பேர் பலியாகினர். இந்தந் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கான சதித் திட்டத்தை வகுத்து, பாகிஸ்தானில் இருந்து செயல்படுத்தியதாக ஹபீஸ் சையது மீது இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.