அல்-கொய்தாவுக்கு பாகிஸ்தான் ராணுவம் - ஐஎஸ்ஐ பயிற்சி அளித்தது: ஒப்புக்கொண்ட இம்ரான்
ஆப்கானிஸ்தானில் போராட பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ அமைப்பு அல்-கொய்தாவுக்கு பயிற்சி அளித்தது என்று பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டு உள்ளார்.
நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் போராட தனது நாட்டின் இராணுவ மற்றும் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ, அல்-கொய்தா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்ததாகவும், அவர்களுடன் எப்போதும் உறவு வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புக் கொண்டார். நேற்று திங்களன்று வெளியுறவு கவுன்சிலில் (CFR) நடைபெற்ற விழாவில், ஒசாமா பின்லேடன் (Osama Bin Laden) அபோட்டாபாத்தில் தங்கியிருப்பது குறித்து பாகிஸ்தானால் ஏதேனும் விசாரணை நடத்தப்பட்டதா என்று இம்ரானிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர், “பாகிஸ்தான் ராணுவம் , ஐ.எஸ்.ஐ., அல்கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் அனைத்திற்கும் ஆப்கானிஸ்தானில் போராட பயிற்சி அளித்தது. பயங்கரவாத குழுக்களுடன் பாகிஸ்தானுக்கு எப்போதும் தொடர்பு இருந்தன. இந்த தொடர்பு இருக்க வேண்டிய ஒன்று தான், ஏனெனில் அவர்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்தனர் எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் இந்த குழுக்களுக்கு பயிற்ச்சி அளிப்பதை நிறுத்திய போது, எல்லோரும் எங்களுடன் உடன்படவில்லை. இராணுவத்தில் உள்ளவர்கள் கூட எங்களுடன் உடன்படவில்லை. எனவே தான் பாகிஸ்தானுக்குள் தாக்குதல்கள் நடந்தன எனக்கூறினார். மேலும் பின்லேடன் அபோட்டாபாத்தில் வசிக்கிறார் என்பது பாகிஸ்தான் ராணுவத்திற்கு தெரியாது என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். "எனக்குத் தெரிந்தவரை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு அபோட்டாபாத் பற்றி எதுவும் தெரியாது எனவும் விளக்கம் அளித்தார்.
முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ஜேம்ஸ் மெட்டிஸ், பாகிஸ்தானை மிகவும் ஆபத்தான நாடு என்று தான் கருதுவதாகக் கூறினார் என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இம்ரான், "பாகிஸ்தான் ஏன் தீவிரமயமாக்கப்பட்டது என்பது குறித்து ஜேம்ஸ் மெட்டிஸுக்கு முழுமையாக தெரியாது என்று நான் நினைக்கிறேன் என பதில் அளித்தார்.
9/11 சம்பவத்துக்கு பிறகு பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் சேருவதன் மூலம் பாகிஸ்தான் மிகப்பெரிய தவறு செய்ததாக அவர் கூறினார். அதஊக்குறித்து இம்ரான் கூறுகையில், "9/11 க்குப் பிறகு அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் பங்கேற்றதால் 70,000 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். இது பாகிஸ்தானின் மிகப்பெரிய தவறு எனவும் கூறினார்.