கத்தாரிடம் எப்.15 ரக ஜெட் விமானத்தை அமெரிக்கா விற்கிறது
மறைமுகமாக ஜ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், அமீரகம், லிபியா அரபு நாடுகள் துண்டித்தன.
இதனால் மேற்கண்ட நாடுகளுக்கிடையே விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் கத்தாருக்கு ஆதரவாக சில நாடுகளும், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதரவாக சில நாடுகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே, அமெரிக்காவிடம் இருந்து 12 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜெட் போர் விமானங்களை வாங்குவதற்கு கத்தார் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்காக, கத்தார் பாதுகாப்பு அமைச்சர் காலித் அல்-அட்டியாஹ் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி ஜிம் மாட்டிஸ் இடையே ஒப்பந்தம் கைழுத்தாகியுள்ளது. காத்தார் 36 எப்-15 (F-15) ரக ஜெட் போர் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது.
வாஷிங்டனில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக பெண்டகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
கத்தார் நாடானது தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக அமெரிக்கா தெரிவித்து வந்த நிலையில், தற்போது அந்நாட்டிற்கு போர் விமானங்களை விற்பனை செய்வது என்பது குறிப்பிடத்தக்கது.