குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் தென்கொரியாவின் யியோங்சங் நகரில் நடக்க உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க வடகொரிய அணியை அனுப்ப பரிசீலனை செய்வதாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட கொரியா ஏவுகணை ஏவிய பிறகு, கேசோங் தொழில் மண்டலத்தின் கூட்டு பொருளாதார திட்டத்தை தென் கொரியா இடைநிறுத்தியது. முதல் இரு நாடுகள் இடையிலான உறவுகள் மோசமடைந்தது.இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக உயர்மட்ட பேச்சுவார்த்தைகள், 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் வட கொரியாவும் தென் கொரியாவும் முதல்முறையாக உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு இன்று சந்தித்து உள்ளன.


இந்த நிலையில் பேச்சு வார்த்தைக்கு பிறகு தென் கொரியாவில் நடைபெறும்  2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடகொரியா சார்பில் வீரர்கள் குழு அனுப்பப்படும் என்று வட கொரியா அறிவித்துள்ளது.


இதற்கிடையே, இரு நாடுகளுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையை ரஷ்யா வரவேற்றுள்ளது. மாற்றத்திற்கான முதல்படியாக இந்த பேச்சுவார்த்தை இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு துறை கருத்து தெரிவித்துள்ளது.


வடகொரியா - தென்கொரியா எல்லையில் உள்ள பான்முன்ஜோம் என்ற கிராமத்தில் இரு நாட்டு உயரதிகாரிகள் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தை இன்று நடந்தது. இதில், உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்பது உறுதியாகியுள்ளது.