இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி; அவசரநிலைக்கு உத்தரவு?
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனப்படுத்த அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனப்படுத்த அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஈஸ்டர் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள், ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி உள்பட 8 இடங்களில் திடீர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல் தொடர்பாக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திடீரென நிகழ்ந்த 8 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 290 பேர் பலியானதை தொடர்ந்து நேற்று பிற்பகல் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், இன்றிரவு 8 மணியில் இருந்து நாளை (23-ம் தேதி) அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்த அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதத்தை தடுக்கும் நோக்கத்தில் பிரகடனப்படுத்தவுள்ள இந்த அவசரநிலை சட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அரசு அறிவிக்கை இன்று நள்ளிரவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.