தாய்லாந் ராணுவ அதிகாரி ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் கொல்லப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே கோரத் என்ற இடத்தில் சார்ஜெண்ட் மேஜர் ஜக்கரபந்த் தொம்மா என்ற இளநிலை ராணுவ அதிகாரி நேற்று காலை அங்கிருந்த ராணுவக் கவச வாகனத்தைக் கடத்த முயன்றார். அவரைத் தடுக்க முயன்ற ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஆயுதங்கள் வைத்திருந்த இடத்திற்குச் சென்ற தொம்மா ஏராளமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அதே வாகனத்தில் டெர்மினல் 21 என்ற வணிக வளாகத்திற்கு வந்தார்.


முன்னதாக அவர் அங்கிருந்த புத்த விகாரத்திலும் துப்பாக்கியோடு சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன. தொடர்ந்து வணிக வளாகம் சென்ற அவர், வெறிபிடித்தவர் போல கண்களில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டுத் தள்ளினார். வணிக வளாகத்தில் அவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சப்தம் வளாகத்தின் வெளியே எதிரொலித்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மீதும் தொம்மா துப்பாக்கியால் சுட்டார். பின்னர் பொதுமக்களில் ஏராளமானோரைப் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு வணிக வளாகத்தில் பதுங்கிக் கொண்டார். பின்னர் வணிக வளாகத்தில் காயமடைந்தவர்களை மீட்கவும், தாக்குதல் நடத்தியவரைப் பிடிக்கவும் ராணுவ கமாண்டோக்கள் புகுந்தனர்.


அப்போது மறைந்திருந்த ராணுவ அதிகாரி தொம்மா நடத்திய திடீர் தாக்குதலில் கமாண்டோ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சூழ்நிலையிலும் தொம்மா அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் நேரடியாக படம் பிடித்து பதிவேற்றிக் கொண்டிருந்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் 35-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலை 3 மணி வரை துப்பாக்கிச் சப்தம் கேட்டதாகவும், அதன் பின்னர் இறுக்கமான சூழல் நிலவுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.