பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மூன்று ராக்கெட்டுகள் மோதியதாக தகவல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.


ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. ஈரானின் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் அமெரிக்க வீரர்களைக் குறிவைத்து ஏற்கனவே இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே 3 ராக்கெட் குண்டுகள் விழுந்ததாக ஏஎஃப்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதில் இரு குண்டுகள் உள்ளூர் நேரப்படி அதிகாலை ஒரு மணியளவில் தூதரகத்தின் பசுமை மண்டலத்தில் விழுந்ததாகவும், மற்றொரு குண்டு டைகிரிஸ் நதிப்படுகையில் விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவப்படையினரே காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.


சமீப காலங்களில் பசுமை மண்டல பகுதியில் இதுபோன்ற தாக்குதல்களை இந்த குழுவினர் நடத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூளும் சூழ்நிலை எழுந்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.