அமெரிக்க பொருட்களுக்கு 75 பில்லியன் டாலர் அளவுக்கு சீனா வரி விதித்துள்ளதைத் தொடர்ந்து, சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேறுமாறு டிரம்ப் உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க, சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகப் போர் நடந்து வருகிறது. தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ள வர்த்தகப் போரினால் இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி வரியை அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் செல்போன்கள், பொம்மைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். மேலும் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு கூடுதலாக 5 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்நிலையில், சீனாவின் நிதியமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 ஆயிரத்து 78 பொருட்களுக்கு 5 முதல் 10 விழுக்காடு வரை கூடுதல் வரிவிதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் விவசாயப் பொருட்கள், சோயாபீன்ஸ், மாட்டிறைச்சி மற்றும் சிறிய ரக விமானங்களுக்கும் வரியை உயர்த்தப் போவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு 5 அல்லது 10 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வரி விதிப்பு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன.


இதனையடுத்து சீனாவில் இருந்து செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், உண்மையாகவே தங்களுக்கு சீனா தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் பணம் விரயமாவது அதிகரித்துக் கொண்டே போவதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு மாற்றாக மற்றொரு இடத்தைத் தேட ஆரம்பிக்கத் தொடங்கி உள்ளதாகவும் தனது ட்விட்டரில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.