45 நாட்களில் Tik Tok, WeChat ஆகியவை அமெரிக்காவில் தடை செய்யப்படும்: டிரம்ப்
அமெரிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளிலிருந்து `நம்பத்தகாத` சீன செயலிகளை அகற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டப்போவதாக இந்த வாரம் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
வாஷிங்டன்: வீடியோ பகிர்வு செயலியான டிக்-டாக்கின் தாய் நிறுவனமான ByteDance மற்றும் WeChat செயலியின் நிறுவனமான Tencent ஆகியவற்றுடனான அமெரிக்காவின் வர்த்தக பரிமாற்றங்களை இன்னும் 45 நாட்களில் தடை செய்வதற்கான நிர்வாக உத்தரவுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donal Trump) பிறப்பித்தார்.
அமெரிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளிலிருந்து "நம்பத்தகாத" சீன செயலிகளை அகற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டப்போவதாக இந்த வாரம் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இந்த உத்தரவுகள் வந்துள்ளன. சீனாவிற்கு சொந்தமான குறுகிய வீடியோ செயலியான டிக்-டோக் மற்றும் மெசஞ்சர் செயலியான WeChat குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களாக உள்ளன என்று டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. “சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பயனளிக்கும் தவறான பிரச்சாரங்களுக்கு Tik Tok செயலி பயன்படுத்தப்படலாம். மேலும் அமெரிக்காவில் நாம் நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க டிக்டாக்கின் உரிமையாளர்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று டிரம்ப் ஒரு உத்தரவில் தெரிவித்தார்.
“WeChat தானாகவே அதன் பயனர்களிடமிருந்து ஏராளமான தகவல்களை எடுக்கிறது. இந்த தரவு சேகரிப்பு சீன கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்கர்களின் தனிப்பட்ட மற்றும் தனியுரிம தகவல்களை அறிந்துகொள்ள உதவுகிறது.” என்று அமெரிக்க அதிபரின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த உத்தரவு அமெரிக்காவில் WeChat ஐ 45 நாட்களில் தடைசெய்யும்.
இந்த வார துவக்கத்தில், டிரம்ப், டிக்-டாக்கின் அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் மைக்ரோசாஃப்ட் கார்பரேஷனுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத் தொகையில் அமெரிக்க அரசாங்கத்திற்கு கணிசமான தொகை கிடைத்தால் தான் இந்த வர்த்தகத்திற்கு ஆதரவு அளிக்கக்கூடும் என கூறியிருந்தார்.
எனினும், செப்டம்பர் 15 முதல் டிக்-டாக் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்பதையும் அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறி வருகிறார்.
இது தொடட்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டென்சென்ட் மற்றும் பைட் டான்ஸ் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.