வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த ஹிலாரி கிளிண்டனை அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்கடித்து, டொனால்ட் டிரம்பை வெற்றிபெறச் செய்ய அந்நாட்டு பிரதான கட்சிகளின் இணையதளங்களுக்குள் ரஷியா ஊடுருவி, சில ரகசிய தகவல்களை களவாடியதாக ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் நேரடி உத்தரவின் பேரில் இந்த சைபர் குற்றத்தில் ரஷிய ஊடுருவலாளர்கள் ஈடுபட்டதாக அமெரிக்க அரசு நேரடியாகவே தெரிவித்தது. இதற்கு, ரஷிய அரசும், விளாடிமிர் புதினும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.


இதற்கிடையில், இந்த ஊடுருவல் தொடர்பாக அமெரிக்க உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த உளவுத்துறையினர் சில முக்கிய தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்து வந்தனர்.


இந்நிலையில்,டொனால்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய ரஷியா முக்கிய பங்காற்றியதாக அமெரிக்க உளவுத்துறையினர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின்பேரில் ஒரு பிரிவினர் தீவிரமாக செயலாற்றியதாக குறிப்பிடுகிறது.


இந்த அனுபவத்தை வைத்துகொண்டு, எதிர்காலத்தில் உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளில் நடைபெறும் ஜனநாயக ரீதியான தேர்தல்களிலும் ரஷியா தலையீடு செய்ய முயற்சிக்கலாம் என கருதுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.