அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பதவி நீக்க தீர்மானத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் தவறான விதத்தில் நடந்துகொண்டார் என்ற அடிப்படையில் அவருக்கு எதிராக அரசியல் குற்ற பிரேரணையை கொண்டுவருவதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன என விசாரணைகளை முன்னெடுத்துள்ள குழு தெரிவித்துள்ளது. சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களிற்கான அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள குறிப்பிட்ட குழு அமெரிக்காவின் தேசிய நலன்களை விட டிரம்ப் தனது தனிப்பட்ட நலன்களிற்கு முக்கியத்துவம் அளித்தார் என தெரிவித்துள்ளது.


இந்நிலையில், அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் முயற்சித்து வருகிறார். இந்நிலையில், ஜோ பிடன் மீது பொய் வழக்கு தொடருவதற்கு, ஐரோப்பிய நாடான உக்ரைன் அதிபரின் உதவியை, டிரம்ப் நாடியதாக புகார் எழுந்தது. அதையடுத்து, அவர் மீது கண்டன தீர்மானம் தாக்கல் செய்வதற்கு, ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக, நீதித் துறைக்கான பாராளுமன்றத்தில் குழு விசாரணை நடத்தியது. அதிபர் டிரம்ப் மீது கண்டன தீர்மானம் தாக்கல் செய்ய உத்தரவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


இதை தொடர்ந்து, பாராளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி, நேற்று, 'டிவி'யில் தன் உத்தரவு குறித்து அறிவித்தார். அவர் கூறியதாவது: அதிபர் டிரம்ப், தன் சொந்த நலனுக்காக, நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துள்ளார். உக்ரைன் நாட்டுக்கான ராணுவ உதவிக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் அளித்தது. ஆனால், அதை அளிக்காமல், டிரம்ப் காலதாமதம் செய்துள்ளார். தன்னுடைய அரசியல் எதிரியை பழிவாங்குவதற்காக, பின்னர் உக்ரைன் அரசின் உதவியை நாடி, பேரம் பேசியுள்ளார். இந்த நாட்டை உருவாக்கியோரின் நம்பிக்கையை காப்பாற்றவும், நாட்டு மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டவும், கண்டன தீர்மானம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக, நீதி துறைக்கான பாராளுமன்ற குழு, பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தியது. அதில் ஆஜரான, நான்கு சட்ட நிபுணர்களில், மூன்று பேர், கண்டன தீர்மான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, பாராளுமன்ற குழுவின் தலைவர் ஜெரால்டு நாட்லர் உள்ளிட்டோருடன், சபாநாயகர் பேசினார். அதைத் தொடர்ந்து, டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர அனுமதி அளித்துள்ளார்.