பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில் அந்த நிதியை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. மேலும் பயங்கரவாதிகளுக்கு தனது நாட்டில் பாகிஸ்தான் புகலிடம் அளித்து வருவதாகவும் இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை குற்றம்சாட்டின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்புக்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சுமார்  33 பில்லியன் டாலர் நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 


இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவு  செய்தி தொடர்பாளர் இந்த தகவலை தெரிவித்தார். இது குறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹெதர் நியூர்ட் கூறும் போது, “ பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


அமெரிக்க பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் ஹக்கானி குழு , தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்காதவரை, பாகிஸ்தானுக்கு வழங்கி வரும் பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்த உள்ளது” இவ்வாறு தெரிவித்தார். 


எனினும், பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு உதவி தொகைகள் எவ்வளவு என்பதை அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தெரிவிக்கவில்லை. எனினும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 255 மில்லியன் ராணுவ உதவியை விட  தொகையை விட கூடுதலான  தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.