தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டுமென்று லண்டன் கோர்ட்டில் இந்தியா சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், அவருக்கு நீதிமன்றம் 2-வது முறையாக ஜாமீன் வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயத்தை நிரூபிக்க தன்னிடம் போதிய ஆதாரம் இருப்பதாக மல்லையா கூறியுள்ளார்.


பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளி என்று இந்தியா அறிவித்துள்ளது.


அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நடுவர் கோட்டில் நடைபெற்று வருகிறது. 


கடந்த ஏப்ரல் 18-ம் தேதி இந்த வழக்கில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரிடம் சரணடைந்த மல்லையா, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நடுவர் கோட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 


இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் மல்லையா நேரில் ஆஜரானார். அவர் சார்பில் மீண்டும் ஜாமீன் கோரப்பட்டது. இதையடுத்து, அவருக்கு டிசம்பர் 4-ம் தேதி வரை ஜாமீன் வழங்கிய கோர்ட் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


இந்த வழக்கில் இந்திய அதிகாரிகள் சார்பில் பிரிட்டன் அரசுத் தரப்பு வழக்குரைஞர் குழு கோர்ட்டில் வாதிட்டு வருகிறது. முன்னதாக, இந்தியாவில் இருந்து சென்ற சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு, பிரிட்டன் அரசுத் தரப்பு வழக்குரைஞர் குழுவுடன் கடந்த மாதம் ஆலோசனை நடத்தியது.


நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் மல்லையா கூறியதாவது:-


என் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுக்கிறேன். கோர்ட் விசாரணையில் இருந்து தப்ப வேண்டுமென்று நினைக்கவில்லை. கோர்ட்டில் எனது தரப்பு நியாயத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நான் எதைக் கூறினாலும், அதனை திரித்து வெளியிடுவதை ஊடகங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன. எனவேதான், ஊடகங்களிடம் நான் எதையும் கூறுவது இல்லை. என்னிடம் உள்ள ஆதாரங்கள் கொர்ர்டில் பேசும்.


இந்திய அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில்தான் பிரிட்டனில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளுக்குச் சென்றேன். ஆனால், அதையும் ஊடகங்கள் மோசமான செய்தியாக வெளியிடுகின்றன என்றார் அவர்.