ஒய்.எஸ்.ஆர். கட்சியின் எம்.பிக்கள் ராஜினாமா?
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.பிக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்..!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மாதம் 5-ம் தேதி துவங்கியது. இப்பாராளுமன்ற பட்ஜெட் இரண்டாவது அமர்வு பெரும்பாலான நாட்கள் முடங்கின. விவாதங்கள் எதுவும் நடத்தப்படாமல் நிதி மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சியினரின் அமளியால் கடந்த 20 நாட்களாக சபை நடவடிக்கைகள் முடங்கின. கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றுடன் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி. இந்த கட்சிக்கு பாராளுமன்றத்தின் மக்களவையில் 5 எம்.பி.க்கள் உள்ளனர்.
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.பிக்கள் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்ய உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜினாமா கடிதத்தினை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.