வைகோ மீது தாக்குதல் முயற்சி அவைத் தலைவர் கண்டனம்

கடந்த 17-ம் தேதி குளத்தூரில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டு என வைகோ பேசிக்கொண்டிருந்தபோது, அவரை நோக்கி பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 19, 2018, 01:16 PM IST
வைகோ மீது தாக்குதல் முயற்சி அவைத் தலைவர் கண்டனம் title=

கடந்த 17-ம் தேதி குளத்தூரில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டு என வைகோ பேசிக்கொண்டிருந்தபோது, அவரை நோக்கி பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஸ்டெர்லைட் நாசகார ஆலையால் மக்களுக்கு ஏற்படும் கெடுதல்களை விவரித்து சுமார் 22 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் அவர் தொடர்ந்து போராடி வருகின்ற காரணத்தினால்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசாங்கம் அனுமதியை இரத்து செய்தது.

ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு நீதிமன்றத்திற்குச் சென்று இடைக்கால அனுமதியைப் பெற்றார்கள். அதை எதிர்த்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பொதுச்செயலாளர் அவர்கள் 22 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்டெர்லைட் நாசகார ஆலையால் குடிதண்ணீரும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் என்று கூறினார்கள். இரண்டு மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி இருக்கக்கூடிய கிராமத்துப் பெண்கள். மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து மக்களும் போராடி வருவதை இன்றைக்கு நாடே பார்த்துக்கொண்டு இருக்கிறது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் ஆலையின் தீங்கை எடுத்துரைத்தும், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தியும் பிரச்சாரம் செய்து வருகின்றார். நேற்றைக்கு முந்தைய நாள் குளத்தூரில் வைகோ அவர்கள் வேனில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தபோது, சிலருடைய தூண்டுதலின் பேரில் அவரை நோக்கி வீசப்பட்ட பாட்டில், அவருக்கு அருகில் விழுந்து உடைந்தது. இந்த அக்கிரமச் செயலை நடத்த முயன்ற கும்பலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பாட்டிலை வீசி தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனடியாகக் கைது செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கூறியுள்ளார்.

Trending News