WHO: இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை

இந்தியாவில் போலியான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது மனித உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 19, 2021, 03:53 PM IST
  • போலி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டன
  • இந்தியாவில் கொரோனா அபாயம் அதிகரிப்பு
  • போலி தடுப்பூசிகள் பல்வேறு சுகாதார கவலைகளை ஏற்படுத்தியுள்ளன
WHO: இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை title=

கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள் மக்களை அச்சப்படுத்தினால், அதிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் வந்துவிட்டன என்று மக்களுக்கு சிறிது ஆசுவாசம் ஏற்பட்டது. ஆனால், தற்போது தடுப்பூசிகள் தொடர்பான கேள்விகளும் எழுந்துவிட்டன.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளில் போலி அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருப்பது அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இந்த எச்சரிக்கையானது, கோவிட் நோய் பிரச்சனையைத் தவிர, போலி தடுப்பூசியால் மக்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள், பாதிப்புகள் குறித்த கவலைகளையும் எழுப்பியிருக்கிறது.

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளில் போலி அதிகரித்திருப்பதாக உலக சுகாதார மையம் (WHO) செவ்வாய்க்கிழமையன்று விடுத்துள்ள மருத்துவ எச்சரிக்கையில் வேறு பல விஷயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
  
இந்தியா, ஆப்பிரிக்காவில் போலி கோவிஷீல்ட் தடுப்பூசி புழக்கதில் இருப்பதாக எச்சரிக்கை விடும் WHO, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் போலி கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் அதிகரிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளது.   ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவால் (Oxford-AstraZeneca) உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை புனே சீரம் இன்ஸ்டிடியூட் (Pune Serum Institute) தயாரிக்கிறது.

Also Read | Dating: சபாஷ்! சரியான கேள்வி! கொரோனா தடுப்பூசி போடாத ஒருவருடன் டேட்டிங் செய்வீர்களா?

கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இந்தியாவில் பயன்படுத்தப்படும் 2 மில்லி லிட்டர் அதாவது நான்கு டோஸ் கொண்ட கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளதாக கூறும் உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை, சீரம் இன்ஸ்டிடியூட் 2 மில்லி லிட்டர் கொண்ட குப்பிகளை உற்பத்தி செய்வதில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது. போலியான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மனித உயிருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சங்கள் அதிகரித்துள்ளன.  

இந்தியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்க நாடான உகண்டாவிலும் அதிக அளவில் போலி தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி காலாவதியானதாக குறிப்பிட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் போலியானவை எனவும், போலி கோவிஷீல்ட் மருந்துகளை கண்டுபிடித்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 

போலி தடுப்பூசி மருந்துகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடும்போது சில நோயாளிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் புகாரளித்தனர். அவற்றை சோதனை செய்து பார்த்தபோது அவற்றில் சில குப்பிகள் போலியானவை என்பதை கோவிஷீல்ட் உற்பத்தியாளர், SII உறுதிப்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Also Read | கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற 3வது டோஸ் தடுப்பூசி அவசியம்! திடுக்கிடும் தகவல்

வெளிப்படையான கொள்முதல், விநியோக அமைப்புகள் மற்றும் கோவின் தளம் மூலம் உண்மையான கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு முயற்சி செய்த போதிலும் போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. தனது பிரத்யேக கண்காணிப்பு அமைப்பு மூலம், இந்தியா மற்றும் உகாண்டாவில் போலி கோவிஷீல்ட் அளவுகளை WHO அடையாளம் கண்டுள்ளது.

போலியான கோவிட் -19 தடுப்பூசிகள் உலகளாவிய பொது சுகாதாரத்திற்கும், பொதுமக்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, போலி தடுப்பூசிகள் சுகாதார அமைப்புகளின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன. நோயாளிகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்க இந்த தவறான தயாரிப்புகளை கண்டறிந்து, அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவது அவசியம் ஆகும்.

மருத்துவமனைகள், கிளினிக்குகள், சுகாதார மையங்கள், மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் சப்ளையர்கள் என பல்வேறு மட்டங்களில் விழிப்புணர்வை அதிகரிக்க இந்தியா மற்றும் போலி தடுப்பு மருந்துகள் புழக்கத்தில் இருக்கும் நாடுகளை உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது.

Also Read | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News