கேரள குண்டுவெடிப்பு: பயங்கரவாத தாக்குதலா...? சரணடைந்த நபர் யார்? - முழு விவரம்

Kerala Ernakulam Blast: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கிறிஸ்துவ பிரார்த்தனைக் கூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக ஒருவர் சரண் அடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 29, 2023, 05:00 PM IST
  • இதில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மாநில எல்லைகளில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சர் கேரள முதல்வரை தொடர்புகொண்டு பேசி உள்ளார்.
கேரள குண்டுவெடிப்பு: பயங்கரவாத தாக்குதலா...? சரணடைந்த நபர் யார்? - முழு விவரம் title=

Kerala Ernakulam Kalamasserry Blast: கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள கலமசேரி பகுதியில் இன்று காலை கிறிஸ்துவ வழிபாட்டு கூடம் ஒன்றில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தின்போது தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பலியான பெண்னின் பெயர் லிபினா என தெரியவந்துள்ளது.

சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலமசேரி பகுதியில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிறிஸ்துவ பிரார்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கிய இந்த மூன்று நாள் கூட்டத்தின் கடைசி நாள் இன்றுதான் (அக். 29).

முதல்வர் அறிக்கை

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முதல்வர் பினராயி விஜயனை தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு நிலைமையை ஆய்வு செய்தார். கேரள மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும். சம்பவம் தொடர்பான விவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். எர்ணாகுளத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் உள்ளனர். டிஜிபி சம்பவ இடத்திற்கு செல்கிறார்கள். நாங்கள் இதனை மிகவும் தீவிரமான ஒன்றாக எடுத்துக்கொள்கிறோம். நான் டிஜிபியிடம் பேசினேன். விசாரணைக்கு பின், தற்போது, ஒருவர் இறந்துள்ளார் என உறுதியாகிறது. சிலர் மருத்துவமனையில் உள்ளனர். விவரம் கிடைத்ததும் பிறகு தெரிவிக்கிறேன்" என்றார்.

மேலும் படிக்க | ஏதோ நடக்கப்போகுது..! புல்வாமா தாக்குதலுக்கு முன் ராகுல்காந்தியின் உள்ளுணர்வு

ஒருவர் சரண்?

தற்போது வெளியாக தகவல்களின்படி, குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவர் சரணடைந்திருக்கிறார் என கூறப்படுகிறது. களமசேரி குண்டுவெடிப்பு தொடர்பாக திருச்சூர் கொடகரா காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்தார் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த நபருக்கு குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கொடகரைக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர். 

அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விஷயங்களை விரிவாகக் கேட்பது; போலீசார் அவரிடம் தகவல்களை சேகரித்ததாக தெரிகிறது. இந்த வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக சரணடைந்த நபர் குறிப்பிட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. சரணடைந்த நபரின் பெயர் மார்ட்டின் எனவும், அவருக்கு வயது 48 எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் போலீஸ் காவலில் உள்ளார். இந்த தகவலை போலீசார் ரகசியமாக வைத்துள்ளதாக தெரிகிறது. அவர் பாதுகாப்பான ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என தெரிகிறது. இது தொடர்பான எந்த விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. மேலும், போலீசார் இதை உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சந்தேகத்தில் ஒரு ரயில் பயணியிடம் விசாரணை

பாதுகாப்பு சோதனையின் போது ரயில் பயணி ஒருவரை சந்தேகத்தின் பேரில் பயணி ஒருவரை கண்ணூர் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர் குஜராத் மாநிலத்தை சேர்த்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது.

குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விடுமுறையில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களை உடனடியாக பணிக்கு திரும்பும்படி அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

டிஜிபி சொல்வது என்ன?

ஜம்ரா சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் காலை 9.40 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹேப் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மாநாட்டு மையத்தில், கிறிஸ்துவ பிரார்த்தனை கூட்டம் நடந்தது. எங்கள் மூத்த அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்தில் உள்ளனர். எங்கள் கூடுதல் டிஜிபியும் சம்பவ இடத்திற்கு வந்துகொண்டிருக்கிறார். நாங்கள் முழுமையான விசாரணையை நடத்தி வருகிறோம், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்போம். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் என்று டிஜிபி தெரிவித்தார்.

குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்புகள்

களமசேரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விபின் தாஸ் கூறுகையில்,"குண்டுவெடிப்பு முதலில் சுமார் 9 மணியளவில் நிகழ்ந்தது, அடுத்த ஒரு மணி நேரத்தில் பல குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகள் நடந்தபோது 2,000க்கும் மேற்பட்டோர் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பால் மாநாட்டு மையத்தில் தீ மற்றும் குழப்பம் ஏற்பட்டது. 

போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ளனர் மற்றும் தடயவியல் குழு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை சரிபார்க்க தளத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, குண்டுவெடிப்புகள் குறைந்த தீவிரம் கொண்டவை மற்றும் IEDகளைப் பயன்படுத்தி வெடிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க | ’ஓபிசி, தலித் பழங்குடியினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை’ ராகுல் காந்தி அட்டாக்

மாவட்ட எல்லைகளில் தீவிர  சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. தமிழக எல்லைகளான இடுக்கி மற்றும் பாலக்காடு எல்லைப்பகுதிகளும் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.

பயங்கரவாத தாக்குதலா?

பாதுகாப்பு சோதனையின் போது ரயில் பயணி ஒருவரை சந்தேகத்தின் பேரில் பயணி ஒருவரை கண்ணூர் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர் குஜராத் மாநிலத்தை சேர்த்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது.

மாநில காவல்துறை உள்ளூர் உளவுத்துறையின் உதவியை நாடியுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காண அரங்கின் உள்ளேயும் வெளியேயும் பொருத்தப்பட்ட அனைத்து கேமராக்களில் இருந்தும் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்து வருகிறது. இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக வெளிப்பட்டால், 2014இல் மத்தியில் நரேந்திர மோடி அரசு வந்த பிறகு, காஷ்மீருக்கு வெளியே நடக்கும் முதல் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாக இது இருக்கும்.

யூதர்கள் அதிகம் வாழும் பகுதி

கேரளா குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து டெல்லி காவல்துறையும் தனது குழுக்களை அதிக உஷார் நிலையில் வைத்துள்ளது மற்றும் நெரிசலான இடங்களில் சிறப்பு கண்காணிப்பு வைக்கப்பட்டுள்ளது. "சிறப்புப் பிரிவு புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது மற்றும் எந்த உள்ளீட்டையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. நெரிசலான இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் குழுவின் முன்னாள் தலைவர் காலித் மஷால், காசாவில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுக்கு மத்தியில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. ஜீ நியூஸ் செய்தியின்படி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் பல யூதர்கள் வசிக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இது பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | ஐ.நா-வில் போர் நிறுத்த தீர்மானம்: இந்தியா ஏன் புறக்கணித்தது? அதற்கான காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News