பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?

Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 12, 2024, 05:31 PM IST
  • சிபிஐ விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை.
  • அம்மாநில முதலமைச்சர் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
  • இதுதொடர்பாக இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்? title=

Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தற்போது நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 9) அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அந்த ஜூனியர் பெண் டாக்டர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 

இதுகுறித்து கொல்கத்தா காவல் கண்காணிப்பாளர் வினீத் குமார் கோயல் கடந்த சனிக்கிழமை (ஜூன் 10) அன்று கூறுகையில்,"இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவமாகும். வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில், அந்த மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் ஆடைகள் கிழிந்த நிலையில் ஒரு பெண் மயங்கிக் கிடப்பதாக தலா காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியை தந்த உடற்கூராய்வு அறிக்கை

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அணைக்கப்பட்டது. சனிக்கிழமை அன்று சஞ்சய் ராய் என்பவர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் இதனை கொலை என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், உயிரிழந்த பெண்ணின் தந்தை, தனது மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என குற்றஞ்சாட்டினார். எனக்கு தெரியும், எனது மகள் என்னிடம் திரும்பி வர மாட்டார் என்று, என்றாலும் இதுகுறித்து முறையாக விசாரணை நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள்... அதானி குழுமம் மறுப்பு!

உயிரிழந்த பெண்ணின் உடலின் பல இடங்களில் காயங்கள் தென்பட்டதாகவும், அந்த பெண்ணின் ஆடைகளும் முறையாக இல்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த நிலையில், முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கையில், அந்த பெண் மருத்துவர் மருத்துவமனையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி, உயிரிழந்துள்ளார் என்பது உறுதியானது. 

உடல் முழுக்க காயங்கள்

மேலும், அந்த அறிக்கையில்,"பெண்ணின் கண்கள், வாய் பகுதிகளில் ரத்தம் வழிந்தது, முகம் முழுவதும் பவ்வேறு காயங்களும் தென்பட்டன. அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிந்தது. அந்த பெண்ணின் வயிறு, இடது கால், கழுத்து, வலது கை, விரல், உதடு ஆகிய பகுதிகளிலும் காயங்கள் தென்படுகின்றன. காலர் எலும்பும் உடைந்திருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் விரிவான உடற்கூராய்வுக்கு பின்னரே இந்த வழக்கு குறித்து இறுதி முடிவை எடுக்க முடியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக, அந்த பெண் மருத்துவர் உடல் கிடந்த அறையின் ஓரத்தில் சஞ்சய் ராயின் உடைந்த ப்ளூடூத் ஹெட்போன் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் அவசரகால சிகிச்சை அளிக்கப்படும் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்த அந்த கருத்தரங்கு கூடத்தில்தான் பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டது எப்படி?

கொலைக்கு பின்னர் அந்த கட்டடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காலை 4 மணியளவில் சஞ்சய் ராய் தனது காதில் ப்ளூடூத் ஹெட்போன் உடன் அந்த கட்டடத்திற்குள் நுழைந்தது பதிவாகியிருக்கிறது. அதேபோல், 40 நிமிடங்களுக்கு பின்னர் சஞ்சாய் ராய் வெளியேறியபோது அவரது காதில் ப்ளூடுத் ஹெட்போன் இல்லை. மேலும், அந்த ப்ளூடூத் ஹெட்போன் ராயின் மொபைலில் இணைக்கப்பட்டிருந்தது. இதனை வைத்தே போலீசார் அவரை கைது செய்தனர். 

மேலும் படிக்க | இமாச்சலில் திடீர் வெள்ளம்... காரில் பயணித்த 9 பேர் உயிரிழந்த சோகம்!

யார் இந்த சஞ்சய் ராய்?

கொலை நடந்த அன்று அந்த பெண் ஜூனியர் மருத்துவர் நைட் ஷிப்ட் பணியில் இருந்துள்ளார். சஞ்சய் தன்னார்வ பணியாளர் (Civic Volunteers) ஆவார். அதாவது, காவலர்களுக்கு உதவும் வகையில் இந்த பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அந்த வகையில், ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் சஞ்சய் ராய் போலீசாரின் தன்னார்வ பணியாளராக இருந்துள்ளார். 

2019ஆம் ஆண்டு இந்த பணியில் சஞ்சய் சிங் சேர்ந்துள்ளார். இவருக்கு அந்த மருத்துவமனை முழுவதும் தடையில்லா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அன்று இரவு அந்த பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு, அவர் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது என குற்றஞ்சாட்டப்படுகிறது.

கல்லூரி முதல்வர் ராஜினாமா

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் சந்திப் கோஷ் ராஜினாமா செய்துள்ளார். "என்னை பொறுப்பில் இருந்து நீக்க மாணவர்களை தூண்டுகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்ன அவதூறு பரப்புபவராக பார்க்கிறார்கள். இதுபோன்ற கருத்துக்களை நான் கூறவில்லை. உயிரிழந்த பெண் என் மகள் போன்றவர். நானும் ஒரு தந்தைதான். ஒரு பெற்றோராக நான் ராஜினாமா செய்கிறேன்" என இன்று அறிவித்தார்.

நாடு முழுக்க போராட்டம்

கொல்கத்தா மட்டுமின்றி டெல்லி, மும்பை உள்ளிட்ட மற்ற நகரங்களில் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வேலை நிறுத்தத்தில் உள்ளனர். அனைத்து மருத்துவர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதற்கு நேற்று பதிலளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என உறுதிப்பட தெரிவித்தார்.

சிபிஐ விசாரணை?

அதுமட்டுமின்றி, வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி,"இந்த வழக்கில் இன்னும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்றால் அவர்கள் விரைவில் கைது செய்யப்படவில்லை என்றால் வழக்கு விசாரணை சிபிஐக்கு வழங்கப்படும். சிபிஐ குற்றவாளிகளை பிடிக்கும் திறன் குறைவாக இருக்கிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்" என அந்த உயரிழந்த பெண்ணின் குடும்பத்தாரை சந்தித்த பின்னர் அவர் கூறியிருந்தார். 

மேற்கு வங்கத்தில் ரவீந்திரநாத் தாகூரின் நோபல் பரிசு திருடுபோன வழக்கு சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய தேதி வரை அதுகுறித்து எவ்வித முன்னேற்றமும் இல்லை, குற்றவாளியை நெருங்கவும் இல்லை என மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் படிக்க | வினேஷ் போகத்திற்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியா? - இதற்கு அவர் தகுதி பெற்றவரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News