Most Shocking Train Accidents In India: ஒடிசாவில் இரண்டு பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் என மொத்தம் மூன்று ரயில் விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில் தற்போது 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 70 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. விடிய விடிய மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். அதை தொடர்ந்து, பிரதமர் நிவாரண நிதியில் இருந்தும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், 2009ஆம் ஆண்டிலும் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது. அதில், 161 பேர் படுகாயமடைந்த நிலையில், 16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சமீப காலங்களில் இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள் குறித்து இங்கு காணலாம்.
இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள்
- 2011ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி அன்று, உத்திரபிரதேசத்தில் எட்டா மாவட்டம் அருகே சாப்ரா-மதுரா எக்ஸ்பிரஸ் ரயில், பேருந்து மீது மோதியது. இதில் 69 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து அதிகாலை 1.55 மணியளவில் ஆளில்லா தண்டவாள கிராஸிங்கில் நடந்தது. ரயில் அதிவேகமாக ஓடியதால் பேருந்து சுமார் அரை கிலோமீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டது.
- 2012ஆம் ஆண்டு என்பது, இந்திய ரயில்வே வரலாற்றில் மிக மோசமான ஆண்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு சுமார் 14 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் தடம் புரண்டது மற்றும் நேருக்கு நேர் மோதியது ஆகிய இரண்டும் அடங்கும்.
- 2012ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அன்று, டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதியில், உத்தரப் பிரதேசத்தின் சந்த் கபீர் நகர் பகுதியில், கோரக்பூர் நோக்கிச் சென்ற கோரக்தாம் எக்ஸ்பிரஸ், கலிலாபாத் நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 2015ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி அன்று டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெரிய விபத்து நடந்தது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலியில் உள்ள பச்ரவான் ரயில் நிலையம் அருகே ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு அடுத்தடுத்த பெட்டிகள் தடம் புரண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர்.
- 2016ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி அன்று இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூரில் புக்ராயன் அருகே தடம் புரண்டதில் குறைந்தது 150 பயணிகள் கொல்லப்பட்டனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று, ஹரித்வார் மற்றும் பூரி இடையே ஓடும் கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள கட்டௌலி அருகே விபத்துக்குள்ளானது. ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 21 பயணிகள் உயிரிழந்தனர், 97 பேர் காயமடைந்தனர்.
- 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று உத்தரபிரதேச மாநிலம் அவுரியா அருகே டெல்லி செல்லும் கைஃபியத் எக்ஸ்பிரஸின் ஒன்பது ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 70 பேர் காயமடைந்தனர்.
- 2022ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி, மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவாரில் பிகானேர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸின் குறைந்தது 12 பெட்டிகள் தடம் புரண்டதில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.
விபத்து நடந்தது எப்படி?
கொல்கத்தாவின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் - 12842) இன்று மாலை 3. 20 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்ததாக ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோரமண்டல் ரயில் சரக்கு ரயில் மீது மோதியதால்தான் முதலில் விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சிறிது நேரத்தில், பெங்களூருவின் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி செல்லும் மற்றொரு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரமண்டல் ரயிலில் இருந்த மொத்தம் 16 பேட்டிகளில் 800 பேருக்கு அதிகமாகனோர் முன்பதிவு செய்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், உயிரிழப்பு எண்ணிக்கை உறுதிசெய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் நாளை காலை ரயில்வே துறை சார்பில் வெளியிடப்படும் என தெரிகிறது.
மேலும் படிக்க | கோரமண்டல் ரயில் விபத்து நடந்தது எப்படி...? மற்றொரு ரயிலும் தடம் புரண்டது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ