'பிரதமர் வருவாரா சொல்லுங்கள்... பொது விவாதத்திற்கு நான் தயார்' - ராகுல் கொடுத்த கிரீன் சிக்னல்

Rahul Gandi Reply For Open Debate Invitation: ஊடகவியலாளர் என்.ராம் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் இணைந்து பொது விவாதத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் ராகுல் காந்தி அதற்கு பதிலளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 11, 2024, 08:05 PM IST
  • பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
  • இரு கட்சிகளும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை தெளிவுப்படுத்த இந்த விவாதம் உதவும்
  • ராகுல் காந்தி இந்த விவாதத்திற்கு ஒப்புக்கொண்டார்.
'பிரதமர் வருவாரா சொல்லுங்கள்... பொது விவாதத்திற்கு நான் தயார்' - ராகுல் கொடுத்த கிரீன் சிக்னல் title=

Rahul Gandi Reply For Open Debate Invitation: 18வது மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டம் ஏப். 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டம் ஏப். 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டம் மே 7ஆம் தேதியும் நடைபெற்றது. தொடர்ந்து, வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி நான்காம் கட்டமும், மே 20ஆம் தேதி ஐந்தாம் கட்டமும், மே 26ஆம் தேதி ஆறாம் கட்டமும், ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்டமும் நடைபெறுகிறது. 

இதில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேசிய அளவில் ஆட்சியை பிடிக்க விறுவிறுப்பான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஊடகவியலாளர் என். ராம், ஓய்வுபெற்ற நீதிபதிகளான மதன் பி லோகுர், அஜித் பி ஷா ஆகியோர் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு வெளிப்படையான விவாதத்திற்கு அழைப்பு விடுத்தினர்.

பொது விவாதத்திற்கு அழைப்பு...

இந்த விவாதத்தில் இரு தரப்பிலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆரோக்கியமாக உரையாடலாம் என அவர்கள் தரப்பில் அழைப்புவிடுக்கப்பட்டது. மேலும், தலைவர்களுக்கான அழைப்பில் மக்கள் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே கேட்கின்றனர். ஆனால், இரு தரப்பில் இருந்து அதுகுறித்த எவ்விதமான ஆக்கப்பூர்வ பதில்களையும் மக்களுக்குச் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | மோடி ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயனுக்கு சிறை: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி ப்ரெஸ் மீட்

ஊடகவியலாளர் என். ராம், ஓய்வுபெற்ற நீதிபதிகளான மதன் பி லோகுர், அஜித் பி ஷா ஆகியோர் இணைந்து கடந்த வியாழக்கிழமை (மே 9) அன்று அனுப்பிய கடிதத்தில்,"18ஆவது மக்களவை பொதுத்தேர்தல் ஏற்கனவே அதன் உச்சத்தை எட்டியுள்ளது. பிரச்சார பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களின் போது, ஆட்சியில் இருக்கும் பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் உறுப்பினர்களும் நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் மையக்கரு தொடர்பான முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளனர் எனலாம். 

ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்த...

இடஒதுக்கீடு, சட்டப்பிரிவு 370 மற்றும் சொத்து மறுபங்கீடு குறித்து பிரதமர் காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜின் கார்கே, அரசியலமைப்புச் சட்டத்தை சிதைப்பது, தேர்தல் பத்திரம் திட்டம் மற்றும் சீனாவுக்கு அரசாங்கத்தின் பதில் ஆகியவை குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பியதுடன், பொது விவாதத்துக்கு வரும்படி பிரதமருக்கு சவாலிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் அந்த கடிதத்தில், "பாரபட்சமற்ற மற்றும் வணிகம் சாராத ஒரு பொது விவாதத்தின் மூலம் நமது அரசியல் தலைவர்களிடம் நேரடியாகக் கேட்பதன் மூலம் குடிமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். 

ஒவ்வொரு தரப்பினரின் குற்றச்சாட்டுகளையும், கேள்விகளையும் மட்டுமல்ல, பதில்களையும் பொதுமக்கள் கேட்டால் அது சிறப்பாக இருக்கும். இது நமது ஜனநாயக செயல்முறையை பெரிதும் வலுப்படுத்த உதவும் என்று நாங்கள் கருதுகிறோம். நாம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருப்பதால், முழு உலகமும் நமது தேர்தலை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதால் இது மிகவும் பொருத்தமாக இருக்கும். 

எனவே, இது போன்ற பொது விவாதம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான மற்றும் துடிப்பான ஜனநாயகத்தின் மெய்யான வடிவத்தை முன்னிறுத்துவதற்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும்" என குறிப்பிட்டிருந்தனர். பொது விவாத்திற்கான இந்த அழைப்பு குறித்து பாஜக இதுவரை பதிலளிக்காத நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பதிலளித்துள்ளார். 

ராகுல் காந்தியின் பதில்...

உத்தர பிரதேசத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தியிடம் இந்த பொதுவிவாதம் குறித்து கேள்வி எழுப்பிய போது, பிரதமர் மோடியுடன் பொதுவெளியில் விவாதம் நடந்த தான் நூறு சதவீதம் தயாராக இருப்பதாக அவர் கூறினார். இந்நிலையில், பொது விவாதத்திற்கு அழைப்பு விடுத்த மூவருக்கும் ராகுல் காந்தி இன்று கடிதம் மூலம் தனது பதிலை தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தியின் அந்த கடிதத்தில்,"மக்களவை தேர்தல் 2024 குறித்த பொது விவாதத்திற்கு உங்கள் அழைப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் அழைப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் விவாதித்தேன். அத்தகைய விவாதம், நமது பார்வையை மக்கள் புரிந்துகொள்ளவும், அந்த விழிப்புணர்வு மூலம் தங்களின் ஆட்சியாளர்களை தேர்வு செய்ய அவர்களுக்கு உதவும் என்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். 

'பிரதமர் மோடி வரமாட்டார்...'

அந்தந்த கட்சிகள் மீது கூறப்படும் எந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் நிறுத்துவது மிகவும் முக்கியமானது. தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் என்பதால், பொதுமக்கள் தங்கள் தலைவர்களிடம் நேரடியாகக் கேட்கத் தகுதியானவர்கள். அதன்படி, நானோ அல்லது காங்கிரஸ் தலைவரோ (மல்லிகார்ஜுன கார்கே) இதுபோன்ற விவாதத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவோம்.

பிரதமர் எப்போது இதில் பங்கேற்க ஒப்புக்கொள்கிறார் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவும், அதைத் தொடர்ந்து விவாதத்தை எப்போது, எப்படி நடத்தலாம் என்பது குறித்து முடிவெடுக்கலாம். உங்கள் முயற்சிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. ஆக்கப்பூர்வமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க விவாதத்தில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார். நேற்று இந்த விவாதம் குறித்து பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி தன்னுடம் பொது விவாதத்தில் பங்கேற்க வர மாட்டார் என்பது தனக்கு தெரியும் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பிரச்சாரத்தில் அனல் பறந்த ராகுலின் உரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News