போராட்டகளமான தமிழகம்; பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர்!

டெல்லி சென்றுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

Last Updated : Apr 3, 2018, 06:07 AM IST
போராட்டகளமான தமிழகம்; பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர்!  title=

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. 

காவிரி பிரச்சணைக்கு தீர்வு காண, ஜல்லிக்கட்டு போராட்டத்தினை போல் மீண்டும் இளைஞர்கள் ஒன்றுகூடி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ கட்சி தலைவர்களும் ஒன்றுகூடி இளைஞர்களுக்கு தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர். 

முன்னதாக நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் திமுக தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வரும் 5-ம் தேதி மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும் இன்று விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கிடையில் தமிழகம் முழுவதிலும் மாணவர்கள் தங்கள் எதிர்பினை தெரிவித்து ஆர்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் சூழலை கட்டுக்குள் கொண்டுவர தமிழக ஆளுநர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதனையடுத்து நேற்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து மாநில பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலை 6.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.டெல்லி சென்றுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கி கூறுவார் என்று தெரிகிறது.

அதன்பிறகு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் அவர் சந்தித்து பேசுகிறார்.கவர்னரின் இந்த டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, யூகங்களுக்கும் வழிவகுத்து உள்ளது.

Trending News