மதம் என்பது மனிதனுக்கு அடையாளம் அல்ல - 'பாய்' பட விழாவில் பேரரசு பேச்சு!

கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி இருக்கும் பாய் படம் விரைவில் வெளியாக உள்ளது.  இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.  

Written by - RK Spark | Last Updated : Dec 14, 2023, 05:03 PM IST
  • பாய் படம் விரைவில் வெளியாக உள்ளது.
  • ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.
  • கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.
மதம் என்பது மனிதனுக்கு அடையாளம் அல்ல - 'பாய்' பட விழாவில் பேரரசு பேச்சு! title=

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய்‘ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா மற்றும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார்.  இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.  கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.  படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். எடிட்டிங் இத்ரிஸ் மேற்கொள்ள இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.  ‘பாய்‘ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவியின் கொள்ளுப்பேத்தியான ஸ்ரீ நியா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். 

மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து தப்பிக்க முயன்ற முக்கிய போட்டியாளர்! பிறகு நடந்தது என்ன?

இவ்விழாவில் தயாரிப்பாளர் ஸ்ரீ நியா பேசும்போது, "பாய் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். இதில் நிறைய திருப்பங்களும் அழகழகான முடிச்சுகளும் இருக்கும். இன்றைய சமுதாயத்தில் நடக்கிற விஷயம் மட்டுமல்ல நடக்கப் போவதையும் இப்படத்தில் கூறியிருக்கிறோம். தமிழ் சினிமாவிற்கு இந்தக் கதை புதிதாக இருக்கும் . கொரோனா சவால்கள் எல்லாம் நிறைந்த காலத்தில் கடினமான நேரத்தில் இதை எடுத்தோம். படக் குழுவினர் கடினமாக உழைத்து தங்கள் உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் ” என்றார்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் பேசும்போது, “இந்த பாய் படத்தின் மூலம் படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர், இயக்கி உள்ள இயக்குநர்,நடித்துள்ள கதாநாயக நடிகர் வெற்றி பெற வேண்டும். உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும்.  பாய் என்றால் சகோதரன் என்ற பொருள். நாம் அனைவருமே சகோதரர்கள். இந்தப் படமும் சகோதரத்துவத்தைத் தான் பேசுகிறது. இந்த உலகத்தில் சகோதரத்துவம் வளர வேண்டும். மனிதநேயம் வளர வேண்டும். இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர். அதாவது கொடுப்பவன் பெரியவன். கொடுக்காதவன்கீழ்குலத்தோன் இவ்வளவுதான். வேறு எந்தப் பிரிவும் கிடையாது” என்றார்.

படம் பற்றி இயக்குநர் கமலநாதன் புவன் குமார் பேசும்போது, “இன்று படம் எடுப்பது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் முக்கியம் மட்டுமல்ல சிரமமானதும் கூட. அந்தப் பணியில் இருக்கும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.  இதை நன்றி கூறும் விழாவாகத்தான் நான் பார்க்கிறேன். முதல் வார்த்தையே நன்றி என்று தான் கூற வேண்டும்.  நானும் நாயகன் ஆதவா ஈஸ்வராவும் நண்பர்கள்.அவர் என்னிடம் பேசும்போது நீங்களும் வளருங்கள் நானும் வளர்கிறேன் என்று தான் சொல்வார். அப்படி சம மரியாதை கொடுப்பவர். பாய் என்றால் சகோதரன் மட்டுமல்ல நண்பன் என்றும் சொல்லலாம். இது ஒரு NON-LINEAR வகை திரைப்படமாக உருவாகியிருக்கிறது” என்றார்.

நடிகர் லொள்ளு சபா ஜீவா பேசும்போது, “நான் படத்தின் தலைப்பைப் பார்த்து விட்டு விழாவிற்கு வரத் தயங்கினேன். ஆனால் படம் எப்படிப்பட்டது என்று பிறகு புரிந்தது. ஏனென்றால் இன்று சமூக ஊடகங்களில் நாம் ஏதாவது ஒன்றை நினைத்து சொல்லி அதை வேறு வகையாக எடிட் செய்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி விடுகிறார்கள். எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள் ஜாதி மதம் பாராமல் பகிர்ந்து கொள்வது அன்பு மட்டும்தான். அடுத்த தலைமுறைக்கு நாம் இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டியது அன்பையும் நல்லவற்றையும் மட்டும் தான்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும் போது, ”முதலில் இந்தப் படத்தைத் தணிக்கை செய்த சென்சார் துறைக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன். பாய் என்று தலைப்பு வைத்து, அந்தப் படத்தை எப்படி சென்சாருக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஒரு வழியாக சென்சார் முடிந்துள்ளது அதற்காகப் பாராட்டுகிறேன். இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத் தான் இருக்கும். படத்தில் மதம் ஒரு அரசியல் கருவி என்ற வசனம் வருகிறது. மதம் என்பது மனிதனுக்கு அடையாளம் அல்ல. மனிதாபிமானம் தான் மதம். மனிதாபிமானம் இருந்தால் எந்த மதமும் தேவையில்லை” என்றார்.

நாயகன்ஆதவா ஈஸ்வரா பேசும்போது, “நாங்கள் எங்கள் உழைப்பை இந்த படத்திற்கு நூறு சதவீதம் கொடுத்துள்ளோம்.திரை உலகத்தில் சிறிய படம் பெரிய படம் என்கிற பாகுபாடு தேவையில்லை. இது ஒரு படம் அவ்வளவுதான்.சிறிய படத்திற்கும் பெரிய படத்திற்கும் எல்லாருமே உழைக்கிறார்கள் அதை வெளியிடுகிற திரைகளின் எண்ணிக்கை தான் வேறுபடுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.அந்த நிலையில்தான் இந்தப் படத்தை அனைவரும் எங்கள் உழைப்பைக் கொடுத்து எடுத்திருக்கிறோம்” என்றார்.

மேலும் படிக்க | ரெடின் கிங்ஸ்லியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News