நடிகை சித்ராவின் மரணம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பரபரப்பு மனுத்தாக்கல்..!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்றக் கோரி, அவரது தந்தை  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Aug 16, 2023, 04:39 PM IST
  • சீரியல் நடிகை சித்ரா 2020ஆம் ஆண்டு சடலமாக மீட்கப்பட்டார்.
  • இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
  • இதைத்தொடர்ந்து அவரது தந்தை நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
நடிகை சித்ராவின் மரணம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பரபரப்பு மனுத்தாக்கல்..!  title=

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சீரியல்களில் நடித்தும் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் இருந்தவர், சித்ரா. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

டிவி நடிகை சித்ரா: 

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தவர், சித்ரா. இவர் சீரியலில் நடிப்பது மட்டுமன்றி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சின்ன பாப்பா பெரிய பாப்பா, சரவணன் மீனாட்சி, வேலிநாச்சி உள்ளிட்ட பல தொடர்களில் அவர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். சில டிவி நிகழ்ச்சிகளில் விருந்தினராகவும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

மரணம்: 

சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணத்தின் மீது பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் வருங்கால கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

சித்ராவை திருமணம் செய்து கொள்ள இருந்த ஹேம்நாத், அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் அது தாள முடியாமல்தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும் பல விதமாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், சித்ராவின் உடற்கூறாய்வில் அவரது மரணத்திற்கு காரணம் தற்கொலைதான் என்று சான்று அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஹேம்நாத் விடுவிக்கப்பட்டார். 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தை பின்னுக்குத்தள்ளிய ஜெயிலர்..! 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா..!

தந்தை வழக்கு: 

சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தந்தை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், சித்ராவின் தந்தை மீண்டும் ஒரு மேல் முறையீட்டு மனுவினை இன்று தாக்கல் செய்துள்ளார். திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹேம்நாத் மீது குற்றச்சாட்டு:

விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில், ஹேம்நாத், வேண்டுமென்றே பல மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும், 2021ம் ஆண்டிலிருந்தே வழக்கு,  குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாகவும் காமராஜ் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. 

முதுமை காரணமாக, வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதாகவும்,  வழக்கில் சாட்சிகளாக உள்ள நபர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலேயே இருப்பதால், வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

சென்னையில் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ‘தனி ஒருவன் 2’ அப்டேட் ரெடி..! வில்லனாக நடிப்பது இவரா..? அப்போ ஹீரோ யாரு..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News