IND vs PAK: பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு பலியாகாமல் இந்திய பேட்டர்கள் தப்பிக்க என்ன வழி...?

Asia Cup 2023, IND vs PAK: ரோஹித், விராட், கில், கேஎல் ராகுல் போன்ற வலது கை பேட்டர்கள் ஷாகின் பந்துவீச்சுக்கு திணறி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த பலவீனத்தை போக்க என்ன வழி என்பதை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 9, 2023, 08:09 PM IST
  • இந்தியா - பாகிஸ்தான் அணி நாளை விளையாடுகிறது.
  • நாளைய போட்டியிலும் மழைக்கு அதிக வாய்ப்பு.
  • இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு.
IND vs PAK: பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு பலியாகாமல் இந்திய பேட்டர்கள் தப்பிக்க என்ன வழி...? title=

Asia Cup 2023, IND vs PAK:  ஆசிய கோப்பை தொடர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. வரும் செப். 17ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய சூப்பர்-4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்தை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முன்னணியில் உள்ளது. 

தொடர்ந்து, இன்று நடைபெறும் சூப்பர்-4 சுற்றின் இரண்டாவது போட்டியை இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 258 ரன்களை வங்கதேச அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. தற்போது வங்கதேசம் அணி பேட்டிங் செய்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை (செப். 10) நடைபெறுகிறது. 

இலங்கை தலநகர் கொழும்பு நகரில் உள்ள பிரேமதசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. குரூப் சுற்றில் இரு அணிகளும் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதேபோல நாளைய போட்டியிலும் மழை பெய்யவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வேறு எந்த போட்டிக்கு இல்லாத ரிசர்வ் டே, நாளை நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மழை ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்தினாலும், இந்திய அணிக்கு அச்சுறுத்தல் என்றால் அது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணி தான். ஷாகின் ஷா அப்ரிடி - ஹரிஸ் ராஃப் - நசீம் ஷா ஆகியோர் இந்திய அணிக்கு மட்டுமின்றி அனைத்து அணிகளுக்குமே அச்சத்தை தரக்கூடியவர்கள் தான். இதில், குறிப்பாக, ஷாகின் ஷா அப்ரிடி தான் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்டர்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்கக் கூடியவராக உள்ளார். 

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எப்படி ரிசர்வ் டே கொடுக்கலாம்? சர்ச்சைக்கு விளக்கம்

சமீப காலங்களில் ரோஹித் - விராட் - கில் - கேஎல் ராகுல் போன்ற வலது கை பேட்டர்கள் ஷாகின் பந்துவீச்சுக்கு திணறி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. மேலும், இந்திய டாப்-ஆர்டரில் இடது கை பேட்டர்கள் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவாக உள்ளது. இடது கை பேட்டர்கள் இல்லாததால் இந்திய அணியால் ஷாகின் ஷா அப்ரிடியின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் தொடுக்க முடியவில்லை எனலாம். இதனாலேயே இஷான் கிஷனை ஓப்பனிங்கில் இறக்க வேண்டும் எனவும் சிலர் கருத்து கூறியும் வருகின்றனர். 

இந்த பலவீனத்திற்கு என்ன காரணம் என பார்த்தால், இன்று கில் செய்தியாளர் சந்திப்பில் கூறிய ஒரு பதிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. நாளைய போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கில் கூறியதாவது,"மற்ற அணிகளுக்கு எதிராக விளையாடும் அளவுக்கு நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதில்லை. அவர்களின் பந்துவீச்சு தாக்குதல் மிகவும் சிறந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் இதுபோன்ற பந்துவீச்சுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி விளையாடாதபோது, அது பெரிய போட்டிகளில் சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதுகின்றன" என கூறியிருந்தார். 

கில்லின் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றாலும் அது நிவர்த்தி செய்ய முடியாதது என்று இல்லை. ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டியில் ஒருவேளை மீண்டும் இந்தியா பாகிஸ்தான் மோதலாம். ஏன் அடுத்த நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றில் மட்டுமில்லாமல் நாக்-அவுட் போட்டிகளிலும் கூட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, இந்திய அணியின் இந்த பலவீனத்திற்கு சரியான தீர்வை கண்டறிவதே பொருத்தமாக இருக்கும். 

அப்ரிடியின் தொடக்க ஓவர்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் - கில் உள்ளனர். கடந்த போட்டியில் குட்-லென்த்தில் போட்ட பந்துகளில் தான் விராட்டும், ரோஹித்தும் விக்கெட்டை பறிகொடுத்தனர். எனவே, இன்-ஸ்வீங்கை கணித்து பேட் மற்றும் பேடை நெருக்கமாக வைத்துக்கொள்ளும் டெக்னிக் தான் சரியானது என வல்லுநர்கள் தொடர்ந்து பாடம் எடுத்து வருகின்றனர். இது ரோஹித், விராட் போன்ற உலகத்தர பேட்டர்களுக்கு தெரியும் என்றாலும், அவர்கள் அந்த இடத்தில் சொதப்ப முக்கிய காரணமாக மன ரீதியாக அவர்கள் அந்த பந்துக்கு தயாராவாதது என்றும் சிலர் கருதுகின்றனர். 

எனவே, ரோஹித் முதல் பத்து ஓவர்கள் தாக்குபிடித்து களத்தில் நிற்பது இந்திய அணிக்கு மிக மிக முக்கியமானது. ஷாகின் அப்ரிடியின் இன் கம்மிங் டெலிவரிகளை நேராக விளையாடுவது அவரை சமாளிக்கவும், ரன்களை குவிக்கவும் நல்ல முறையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை இந்திய ஓப்பனர்கள் நாளை கடைபிடித்தால், இந்திய பேட்டிங்கில் சொதப்பும் வாய்ப்பு குறைவு தான்.

மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2023-ல் இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய 6 சர்ச்சைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News