IPL: ஐபிஎல் வரலாற்றின் கருப்பு பக்கங்கள்... கிரிக்கெட் ரசிகர்களை உலுக்கிய முக்கிய சர்ச்சைகள்!

IPL Controversies: ஐபிஎல் தொடர் என்றாலே சர்ச்சைகள் நிறைந்திருக்கும் என கூறப்படும் நிலையில், அதன் வரலாற்றில் மறக்க முடியாத நான்கு முக்கிய சர்ச்சைகள் குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 22, 2023, 01:20 PM IST
  • ஐபிஎல் 2023 தொடர் இந்தியா முழுவதும் 12 நகரங்களில் நடைபெறுகிறது.
  • ஐபிஎல் 2023 முதல் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதல்.
  • தோனியின் கடைசி சீசன் இது என்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
IPL: ஐபிஎல் வரலாற்றின் கருப்பு பக்கங்கள்... கிரிக்கெட் ரசிகர்களை உலுக்கிய முக்கிய சர்ச்சைகள்! title=

IPL Controversies: 16ஆவது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதியில் இருந்து மே மாதம் வரை நடைபெற இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக கொரோனா தொற்றின் காரணத்தால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ஐபிஎல் தொடர் இம்முறை கட்டுப்பாடுகளற்ற வழக்கமான வகையில் நடைபெறுகிறது. 

இந்தியாவின் 12 நகரங்களில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. கடந்தாண்டு அறிமுகமான குஜராத், லக்னோ அணிகள் உள்பட மொத்தம் 10 அணிகள் போட்டியிடுகின்றன. முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை, நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்திக்கிறது. மேலும், இது சிஎஸ்கே கேப்டன் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்பதால் அனைவரும் பலத்த எதிர்பார்ப்புடன் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த நேரத்தில், கடந்த 15 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றை அசைப்போடுவதும், அந்த எதிர்பார்ப்புகளுக்கு சற்று தீனிபோடுவதுபோன்று அமையும் என்பதால், ஐபிஎல் தொடரின் சர்ச்சைகள் குறித்து இதில் காணலாம். ஐபிஎல் தொடர் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது என்றாலும், அதன் மறக்கவே முடியாத, (கூடாத) நான்கு சர்ச்சைகளை தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே-வின் 'சுட்டிக் குழந்தை' சாம் கரண் இந்த ஆண்டு விளையாடப்போகும் ஐபிஎல் அணி..!

1. ஸ்ரீசாந்த் - ஹர்பஜன் சர்ச்சை

ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலேயே பெரும் சர்ச்சை ஒன்று வெடித்தது. அப்போது, பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த ஸ்ரீசாந்தை, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அப்போது விளையாடிய ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்ததுதான் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. மைதானத்தில் ஸ்ரீசாந்த் அழுதுகொண்டிருந்தை பலரும் பார்த்த நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில் ஹர்பஜன் அவரை அறைந்தது தெரியவந்தது. ஹர்பஜன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அந்த தொடரில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டார். மேலும், ஐபிஎல் நிர்வாகத்தால் அவரது ஊதியம் நிறுத்திவைக்கப்பட்டது. பிசிசிஐ அவருக்கு, ஐந்து ஒருநாள் போட்டிகளில் இருந்து தடை விதித்து தண்டனை வழங்கியது.

2. லலித் மோடி - வாழ்நாள் தடை

ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முக்கிய புள்ளியாக இருந்தவர் லலித் மோடி. இவர் ஐபிஎல் நிர்வாகத்தின் முதல் தலைவராக செயல்பட்டார். இவர் மீது முன்வைக்கப்பட்ட சில முறைக்கேடு குற்றச்சாட்டுகளை அடுத்து, இவர் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பிசிசிஐ, இவரை குற்றவாளி என கண்டறிந்தது. இவரை நிர்வாகத்தில் இருந்து நிரந்தரமாக தடை செய்வதாக பிசிசிஐ 2013இல் அறிவித்தது. இருப்பினும், அமலாக்கத்துறை இவர் மீது விசாரணையை தொடங்கும் முன்பே, குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டு, லண்டனில் குடியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

3. வான்கடேவில் ஷாருக்கானுக்கு தடை

பாலிவுட்டின் மன்னன் என்றழைக்கப்படும் ஷாருக்கான், மும்பையின் வான்கடே மைதானத்தில் வர ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. ஒரு போட்டிக்கு பின், நிர்வாகிகளிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக கூறி, மும்பை கிரிக்கெட் சங்கம் இந்த தடையை விதித்தது. அதாவது, மைதானத்தின் பாதுகாவலர் ஒருவரிடம் ஷாருக்கான் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத முறையில் நடந்துக்கொண்டதாக குற்றச்சாட்டப்பட்டது. 

4. உச்சகட்ட சர்ச்சை

ஐபிஎல் வரலாற்றின் கொடிய கருப்பு பக்கம் என்றால் அது இதுவாகதான் இருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலியா, அங்கித் சவான் ஆகியோர் சூதாட்டம் செய்ததாக கூறி டெல்லி காவல்துறை அவர்களை கைது செய்தது கிரிக்கெட் உலகையே உலுக்கியது எனலாம். 

இதன் தொடர்சியாக, சிஎஸ்கே அணியின் உரிமையாளரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், விண்டு தாரா சிங் உள்ளிட்டோரை சூதாட்டம் மற்றும் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் இருந்த குற்றத்திற்காக மும்பை காவல்துறையினர் கைதுசெய்தனர். இதை தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பதாக உச்ச நீதிமன்றம் 2015ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. தொடர்ச்சியாக, 2016, 2017 ஐபிஎல் சீசன்களில் இவ்விரு அணிகளும் பங்கேற்கவில்லை. இந்த அணிகளுக்கு பதில், குஜராத், புனே அணிகள் சேர்க்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.  

மேலும் படிக்க | ஐபிஎல் 2023: டிக்கெட் விற்பனை தொடங்கியது..! சிஎஸ்கே - குஜராத் மேட்ச் டிக்கெட் வாங்குவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News