WPL Auction: அதிக தொகைக்கு ஏலம்... சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த ஸ்மிருதி மந்தனா - ஆர்சிபி கேப்டன்!

WPL Auction 2023: இந்திய மகளிர் அணி ஓப்பனிங் பேட்டர் ஸ்மிருதி மந்தனா அதிக தொகைக்கு மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் ஏலத்தில் எடுக்கப்பட்டபோது, அவர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 13, 2023, 05:22 PM IST
  • ஆர்சிபி, மும்பை அணிக்கு மந்தனாவை எடுப்பதில் போட்டி இருந்தது.
  • மும்பையில் இந்த ஏலம் நடைபெற்றது.
  • தென்னாப்பிரிக்காவில் இருந்து தொலைக்காட்சியில் இந்திய வீராங்கனைகள் ஏலத்தை பார்த்தனர்.
WPL Auction: அதிக தொகைக்கு ஏலம்... சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த ஸ்மிருதி மந்தனா - ஆர்சிபி கேப்டன்! title=

கிரிக்கெட்டின் அதிக வியாபாரம் நிகழும் தொடராக பார்க்கப்படும் தொடர், ஐபிஎல். டி20 ஃபார்மட் கிரிக்கெட்டை உலகளவில் பிரபலமாக்கியதற்கு ஐபிஎல் தொடருக்கு முக்கிய பங்குகிருக்கிறது. அதுமட்டுமின்றி, வீரர்களின் வருவாய் முதல் பல விஷயங்களில் ஐபிஎல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் கிரிக்கெட்டின் பரிமாண வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. 

தொடர்ந்து, மகளிர் கிரிக்கெட் விளையாடுவதை ஊக்குவிக்கவும், இந்தியாவின் இளம் திறமைகளை கண்டறியவும் மகளிருக்கும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை இந்தாண்டு பிசிசிஐ நனைவாக்கியுள்ளது. வுமன்ஸ் பிரீமியர் லீக் என்ற பெயரில், இந்தாண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை இந்த டி20 தொடர் நடைபெற உள்ளது. 

இந்த தொடரில், மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமாதாபாத், லக்னோ (UP Warriors) ஆகிய ஐந்து அணிகள் இத்தொடரில் விளையாட உள்ளது.  இந்நிலையில், WPL அணிக்களுக்கான, வீராங்கனைகள் ஏலம் இன்று மும்பையில் நடைபெற்றது. 

மேலும் படிக்க | IPL அணிகள் ஏலத்தை மிஞ்சிய WPL... மகளிர் அணிகளின் ஏலத்தொகை முழு விவரம்!

ஏலத்தின் டாப் வீராங்கனைகள்

இந்த ஏலத்திற்கு மொத்தம் 1,525 வீராங்கனைகள் விண்ணப்பித்திருந்த நிலையில், 409 வீரர்கள் மட்டும் ஏலம் விடப்படுகிறார்கள். அணிக்கு தலா 18 வீராங்கனைகள் என மொத்தம் 90 வீராங்கனைகள் ஏலம் மூலம் நிரப்பப்படுவார்கள். இதில், 30 இடங்கள் வெளிநாட்டு வீராங்கனைக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

வீராங்கனைகள் ஏலம் இன்று மதியம் தொடங்கிய நிலையில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ரூ. 3.4 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னரை ரூ. 3.2 கோடிக்கு குஜராத் அணியும், இங்கிலாந்து வீராங்கனை நடாலி ஸ்கிவரை ரூ. 3.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் வாங்கியுள்ளது. இவர்கள் மூவர்தான் ரூ. 3 கோடிக்கு மேல் ஏலம் போன வீராங்கனைகள் ஆவர்.

இந்திய வீராங்கனைகள் தீப்தி சர்மாவை ரூ. 2.60 கோடிக்கு லக்னோ அணியும், ஜெமிமா ரோட்ரிக்ஸை ரூ. 2.20 கோடிக்கு டெல்லி அணியும் வாங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரை ரூ. 1.8 கோடிக்கு மும்பை அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது. 

தற்போது, இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில், பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக WPL ஏலம் குறித்த நற்செய்திகளும் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கிறது.

கொண்டாடிய வீராங்கனைகள்

மும்பையில் நடைபெறும் ஏலத்தை, தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்திய வீராங்கனைகள் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பில் கண்டுகளித்தனர். அதில், ஸ்மிருதி மந்தனாவை ஏலத்தில் எடுக்கும்போது, வீராங்கனைகள் உணர்ச்சி பெருக்கில் திளைத்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

'ஈ சாலா கப் நமதே'

அதில், ஒவ்வொரு முறையும் மந்தனாவுக்காக அணிகள் ஏலத்தொகையை அதிகரித்தபோதெல்லாம் வீராங்கனைகள் ஆரவார ஒலி எழுப்பி மகிழ்ந்தனர். குறிப்பாக, ஸ்மிருதி மந்தனா இருக்கையில் அமர முடியாமல்,  சந்தோஷத்தில் திளைத்துவந்தார். மும்பை, பெங்களூரு இடையே நடைபெற்ற அந்த ஏலப்போர் அவர்களை பரபரப்பாக வைத்திருந்த நிலையில், இறுதியாக ஸ்மிருதியை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தபோது, ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட அனைவரும் கரகோஷம் எழுப்பி தங்களின் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். தொடர்ந்து வீராங்கனைகள், 'ஆர்சிபி, ஆர்சிபி, ஆர்சிபி' என ஆராவார குரலை எழுப்பினர். அப்போது, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், தீப்தி சர்மா உள்ளிட்ட வீராங்கனைகள் உடனிருந்தனர். 

இந்த வீடியோவை தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். ஸ்மிருதி மந்தானாவின் மகிழ்ச்சியை கண்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளை அள்ளிவீசி வருகின்றனர். மேலும், WPL தொடரின் முதல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர், மந்தானா தான்.

அணிக்கு தலா 12 கோடி ரூபாய் ஏலத்தொகை ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் 25 சதவீத தொகையை மந்தானாவுக்காக பெங்களூரு அணி செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பெங்களூரு அணியின் கேப்டனாக மந்தானா நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மீண்டும் திருமணம் செய்ய உள்ள ஹர்திக் பாண்டியா! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News