16-வது நாளாக போராட்டம் நடத்தும் விவசாயிகள்!!

Last Updated : Mar 29, 2017, 08:37 AM IST
16-வது நாளாக போராட்டம் நடத்தும் விவசாயிகள்!! title=

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவு பெருகி வரும் நிலையில், 16-வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் சுமார் 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 16 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்தும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டியும் பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு உ.பி. மாநில பாரத் கிசான் யூனியன் விவசாயம் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மற்றும் ஹரியானா, பஞ்சாம் உள்ளிட்ட மாநில விவசாயிகளும் ஆதரவு நல்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை விவசாயிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசனுடன் சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து விவசாயிகள் மனு கொடுத்தனர். அவரிடம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை விளக்கிவிட்டு வந்தனர். 

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருவதால், தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங்கை விவசாயிகள் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர். 

ஜனாதிபதி பிரணாப் மற்றும் அரசின் முக்கிய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ள விவசாயிகள், முடிவு தெரியாமல் ஊர் திரும்ப மாட்டோம் என்று கூறி இன்று 16-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். வெல்க கம்பீர விவசாயிகளின் போராட்டம்.

Trending News