ஸ்டாலின் மகன் என்பதை தாண்டி ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்பதன் ஆரம்பத்தில் அடையாளப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். திரைப்பட தயாரிப்பு, விநியோகம் என எழுந்த உதய் ஹீரோவாக வளர்ந்தார். அரசியல் ரத்தம் உடலில் ஓடுவதால் கடந்த 2019ஆம் ஆண்டு திமுகவின் இளைஞரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் திமுகவின் இளைஞரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உதயநிதி மீது விமர்சனங்களை சிலர் வைத்தனர். இருப்பினும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதிக்கு தேர்தலில் சீட் ஒதுக்கினார் ஸ்டாலின். ஏற்கனவே இளைஞரணி பஞ்சாயத்து புகைந்துகொண்டிருக்க எம்.எல்.ஏ சீட் ஒதுக்கப்பட்டது மேலும் பஞ்சாயத்தை கூட்டியது. நிலைமை இப்படி இருக்க திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றார் உதயநிதி.
அதனையடுத்து உதயநிதியின் நடவடிக்கைகள் தொகுதி மக்களுக்கும், சட்டப்பேரவை பேச்சுக்கள் அவை உறுப்பினர்களுக்கும் ரசிப்புக்குள்ளாகின. மேலும் பத்திரிகைகளிலும் அவரது பேட்டிகள் ஒருசேர பாராட்டையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தின. நிலைமை இப்படி இருக்க, திமுக ஆட்சி அமைந்து சில மாதங்களிலேயே உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென்று ஆரூடம் கூறப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
அமைச்சரவையில் உதய் இடம்பிடிக்கவில்லை என்றாலும் ஸ்டாலினுக்கு அடுத்த பவர் சென்ட்டர் உதயநிதிதான் என அறிவாலயத்திலிருந்து குரல்கள் கேட்கின்றன. அதை உறுதிப்படுத்தும்விதமாக உதயநிதியின் பிறந்தநாளுக்கு (நவம்பர் 27) தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பாக அடிக்கப்பட்டிருக்கும் போஸ்டர்களிலும், நிகழ்ச்சி அழைப்பிதழ்களிலும் ‘சின்னவர்’ என்றே பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஜெயலலிதாவுக்கு எப்படி சட்டப்பேரவையில் அதிமுகவினர் பாராட்டு பத்திரம் வாசித்தார்களோ அதேபோல் உதயநிதிக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர்களும், திமுக எம்.எல்.ஏக்களும் பாராட்டு பத்திரம் வாசிக்கும் நிகழ்வும் நடந்தேறியது.
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், திமுக எம்.எல்.ஏவும், திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளர் செந்தில்குமாரின் மனைவியுமான் மெர்சி தனது முகநூல் பக்கத்தில், “எங்க அண்ணே 27 வருடங்களுக்கு முன்பு இருந்து ,பார்க்கும் பொழுதெல்லாம் அண்ணே நீங்க படம் நடிக்கனுனே ,அரசியலுக்கு வரனுனேன் சொல்லிகிட்டே இருப்போம் …புன்னகையோடு கடந்து செல்வீர்கள் . ஒரு பந்தா இல்லாத மிக எளிமையாக இருக்க கூடிய மனிதர் . உங்கள் மனைவி உங்களுக்கு ஏற்றார் போல மிகவும் எளிமையானவர் திருமதி கிருத்திக்கா உதயநிதி .
உங்கள் பிள்ளைகள் ஒரு அலட்டல் இல்லாமல் வளர்கிறார்கள் . உங்கள் பெற்றோர்கள் அன்பு தங்கை நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என நித்தமும் நினைப்பவர்கள் . திண்டுக்கல்லில் இருந்து சென்னை வரும்போதெல்லாம் அண்ணனுடன் புகைபடம் எடுக்க ஆசையாக ஓடோடி வருவோம் அன்புடன் கூப்பிடுவீர்கள் .ஆதவன்உங்கள் படத்துக்கு பிறகு எங்கள் மகனுக்கு ,ஆதவன் என தலைவர் பெயர் சூட்டினார் .ஆதவன் சென்னை வருவதே உங்களை பார்க்க தான் .கொரானா காலத்தின் போதும் தான் சேர்த்த பணத்தை உங்கள் கையிலும் ,தலைவர் கையிலும் கொடுக்க வேண்டும் என அடம்பிடித்து சென்னை வந்தான் .நீங்கள் திண்டுக்கல் வந்தால் உங்களை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பான் .
அவன் தந்தையிடம் கூறுவான் அவர் அதை கண்டுகொள்ளாத போது ,உங்களுடன் யார் வந்திருப்பார்கள் என அறிந்து அவர்களிடம் என்னை உதய் மாமாவிடம் கூட்டிட்டு போங்கள் என சொல்லான் ஆதவன் . இப்படி குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோர்க்கும் வாய்த்து விடாது அண்ணே ! யாரை பற்றி யார் கூறினாலும் ,அப்படியே ஏற்று கொள்ளாமல் உங்களுக்கு அவர்கள் மேல் என்ன பார்வை உள்ளது என தெளிவாக பிரித்து பார்க்கும் தலைவன் குணம் உங்கள் தாத்தாவை போல் உள்ளது .
கடுமையாக உழைக்கிறீர்கள் உங்களுக்கு இந்த பதவியை விட மிக பெரிய பதவி வந்தே தீரும் ! நீங்கள் இந்த நாட்டின் மந்திரியாக வேண்டும் !வருங்காலத்தில் முதலமைச்சர் ஆக வேண்டும் !என்பதெல்லாம் எங்கள் கனவு ,லட்சியம் ,ஆசை ! இவையெல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக நடந்தேயாகும்! உங்கள் உழைப்புக்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் தொழி்ழையும் ஆசிர்வதிப்பாராக ! உங்கள் தங்கைகள் நாங்கள் எல்லோரும் என்பதில் எங்களுக்கு எப்போதுமே பெருமைதான்” என பதிவிட்டுள்ளார்.
தற்போது மெர்சியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. ஏனெனில், திமுக வென்றபோது அதிக லீடிங்கில் வென்றவர் ஐ.பெரியசாமி. எனவே அமைச்சரவையில் முக்கியமான துறையை ஐ.பெரியசாமி கேட்டதாகவும் அதற்கு ஸ்டாலின் இசைந்துவரவில்லை எனவும் அப்போதே பேசப்பட்டது. மேலும் தனக்கு வரவில்லையெனினும் தன் மகனான செந்திலுக்கு அமைச்சரவையில் ஐ.பி இடம் கேட்டதாகவும் அதற்கும் ஸ்டாலினும், அவரது சகாக்களும் ஒத்துவரவில்லை. எனவே அப்போதே ஐ. பெரியசாமி குடும்பம் ஸ்டாலின் மேல் சிறிது வருத்தம் கொண்டது. எனினும் திமுக மீது கொண்ட பற்றால் அனைவரும் அமைதியாக இருந்தனர்.
இனி திமுகவின் அடுத்த பவர் சென்ட்டர் உதயநிதிதான் என பெரும்பாலும் உறுதியாகிவிட்ட சூழலில் தங்களின் ராஜ விஸ்வாசத்தை உணர்த்தவே ஐபி குடும்பத்திலிருந்து இப்படி ஒரு பதிவு வந்திருக்கிறது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அதேசமயம் இப்படிப்பட்ட பதிவை ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக கனிமொழி என்ற ஒரு ஆளுமை அடுத்ததாக இருக்கும்போது எதற்காக இவ்வாறான பதிவு இப்போதே கட்சியினரிடமிருந்து குறிப்பாக ஒரு சூப்பர் சீனியரின் குடும்பத்திலிருந்து வரவேண்டும். இது தேவையில்லாத ஒன்று என ஸ்டாலின் நினைக்கிறார் எனவும் கூறுகிறார்கள் அவர்கள்.
மேலும் படிக்க | அதிமுக வேறு.. பாஜக வேறு.. உட்கட்சி விவகாரத்தில் யார் தலையிடும் இல்லை -ஜெயக்குமார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ