அமைச்சர்தான் வம்புக்கு இழுக்கிறார் - சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக திமுக - அதிமுக இடையே காரசார விவாதம்.  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 29, 2022, 04:50 PM IST
  • நீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது ?
  • தமிழக சட்டப்பேரவையில் திமுக - அதிமுக காரசார விவாதம்
  • அமைச்சர் வம்புக்கு இழுப்பதாக எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
அமைச்சர்தான் வம்புக்கு இழுக்கிறார் - சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்! title=

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு யார் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்ற விவாத சண்டை அடிக்கடி நடைபெறுவது உண்டு. அதன்படி இன்றைய சட்டப்பேரவையிலும் காரசார விவாதம் நடைபெற்றது.  
சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார். 
அதில், "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கு காரணம், அதிமுக ஆட்சியில் நீட்தேர்வு கொண்டு வரப்பட்டது தான்", என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | நீட் விலக்கு சட்டம்: விடிவு எப்போது?- ராமதாஸ் கேள்வி

அமளிக்கிடையே பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதற்கு திமுகவும் காங்கிரசும் தான் காரணம். போராட்டம் நடத்தியதால் வந்ததல்ல 7.5% இட ஒதுக்கீடு. சிறப்பு பிரிவின் கீழ் நான் கையெழுத்திட்டதால்தான் 7.5% இட ஒதுக்கீடு வந்தது", என்றார். 

இதற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன், "கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதும், நீங்கள் தலைவராக ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா இருந்த போதும் நீட் வரவில்லை. நீங்கள் முதலமைச்சரான பிறகு தான் நீட் கொண்டு வரப்பட்டது. 7.5% இட ஒதுக்கீடு வந்ததே, நீட் தேர்வை அதிமுக அரசு கொண்டு வந்ததால்தான். அத்தகைய 7.5% இட ஒதுக்கீடு சட்டத்துக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்றார். 
இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, "7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் கையெழுத்திடவில்லை. முதலமைச்சரின் தனி அதிகாரத்தின்படி, நான் கையெழுத்திட்டதால்தான் 7.5% இட ஒதுக்கீடு வந்தது.
உண்மையை மறைக்க வேண்டாம். 2010 காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில்தான் நீட் வந்தது", என்றார்.

மேலும் படிக்க | நீட் தேர்வு விலக்கு மசோதாவா.? கை விரிக்கும் மத்திய அரசு..!

இருதரப்பினரும் மாறி மாறி அனல்பறக்க பேசிக்கொண்டிருக்கும் போது இடையே குறுக்கிட்ட சபாநாயர் அப்பாவு, "விவாதம் வேண்டாம் எதற்கு" என்றார்.

அப்போது, "அமைச்சர் தான் வம்புக்கு இழுக்கிறார்" என காரசாரமாக பதிலளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்கிடையே பேசிய ஓ.பன்னீர் செல்வம், "நீட் தேர்வு மசோதாவுக்கு அஸ்திவாரம் போட்டது திமுகதான். அன்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்த திமுகவின் காந்தி செல்வன் தான் நீட் தேர்வு மசோதாவில் கையெழுத்திட்டார்", என்றார்.

இற்கு பதிலளித்த அமைச்சர் க.பொன்முடி, "நீட் விருப்பம் இல்லாத மாநிலங்களுக்கு நீதிமன்றம் சென்று விலக்கு பெற்றுக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. ஆனால் நீங்கள் நீதிமன்றத்தில் சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான்  நீட் தேர்வு உங்கள் ஆட்சி காலத்தில் உள்ளே நுழைந்தது", என்றார். 

இந்த காரசார விவாதத்தால் அவையில் சற்று நேரம் அமளி ஏற்பட்டது. 

மேலும் படிக்க | ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் தெரியுமா.? மத்திய அரசை அறிவுறுத்திய கனிமொழி.!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News