பருவமழையை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி: குற்றம் சுமத்தும் எடப்பாடி பழனிச்சாமி

திமுக அரசு பருமழையை சரியாக கையாளவில்லை, ஸ்டாலின் அரசின் 100 நாள் சாதனை வீடுகளில் நீர் தேங்கியதுதான் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 8, 2021, 07:35 PM IST
  • ருவமழையை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி
  • குற்றம் சுமத்தும் எடப்பாடி பழனிச்சாமி
  • சரியாக திட்டமிடாததால் வீதிகளில் மழை நீர் தேங்கியதாக குற்றச்சாட்டு
பருவமழையை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி: குற்றம் சுமத்தும் எடப்பாடி பழனிச்சாமி title=

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டுகிறார். தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு பருமழையை சரியாக கையாளவில்லை என்றும், ஸ்டாலின் அரசின் 100 நாள் சாதனை வீடுகளில் நீர் தேங்கியதுதான் என்றும் காட்டமாக கூறுகிறார் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக மூத்தத் தலைவர்களில் ஒருவருமான பழனிச்சாமி.

வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மாநகரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம் ,  கேகே நகர் கோயம்பேடு உள்ளிட்ட மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர். 

சென்னை கோயம்பேடு தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு போர்வை ,  பால் பாக்கெட், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மாநில அரசை குறைகூறினார்.

"சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகிவிட்ட நிலையில், தமிழக அரசு சரியாக திட்டமிடாததால் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்னதாகவே, மழையை எதிர்கொள்வது தொடர்பாக முன்பே திட்டமிட்டு செயல்படுவோம். திமுக அரசு முறையாக திட்டமிடாமல் இருந்ததால் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும்போது நிலைமை மேலும் மோசமாகிடிவும்” என்று முன்னாள் முத்லமைச்சர் தெரிவித்தார்.

ALSO READ | புதுமண தம்பதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சியும் ஆசீர்வாதமும்

”அரசின் மெத்தன போக்கால் பல்லாயிரக்கணக்கானோர் முகாமில் தங்கியுள்ளனர். வானிலை முன்னறிவிப்பு வந்த உடனே, அரசு துரித நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் . ஸ்டாலின் தலைமையிலான அரசு இனியேனும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோட்டார்கள் மூலம் தண்ணீர் தேங்கிய இடங்களில் நீரை விரைந்து அகற்ற வேண்டும்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்கவில்லை என தன்னிடம் பலர் தெரிவித்ததாக தெரிவித்த முன்னாள் முதல்வர், தேங்கியுள்ள நீரை அதிக திறன் கொண்ட எஞ்சின் மூலம் அகற்றுமாறு மாநகராட்சி ஆணையரிடம் கூறியுள்ளதாகவும், பல இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

அதிமுக ஆட்சியில் ஆகஸ்ட் மாதம் முதலே தூர்வாரினோம் , எனவே மழை பெய்த சில மணி நேரத்தில் நீர் வடிந்து விடும். திமுக அரசு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதில்  தோல்வி அடைந்துள்ளது.  நான் சென்ற 4 இடத்திலும் கண்ணீர் மல்க என்னிடம் புகார் தெரிவித்தனர் , அதிகாரிகள் யாரும் அங்கு சென்று இதுவரை  பார்வையிடவில்லை. அதிமுக அரசு 3000 இடங்களுக்கு மேல் தண்ணீர் தேங்குவதை கண்டறிந்து அங்கு  வடிகாலை ஏற்படுத்தினோம் ..அதனால் 50 இடங்களில் மட்டுமே நீர் தேங்கியது. 

aiadmk

அம்மா உணவகம் மூலம் கொரோனா காலத்தில் நாள்தோறும் 8 லட்சம் பேருக்கு உணவளித்தோம். இந்தியா முழுவதும் அம்மா உணவக மாதிரியில் உணவகத்தை திறந்து வரும் நிலையில் இங்கு மட்டும் மூட முயற்சி நடக்கிறது. 

ஸ்டாலின் ஒரு சில இடங்களை மட்டுமே சென்று பார்வையிட்டுள்ளார். அரசு முறையாக இனி வரும் நாளில் நடவடிக்கை எடுக்குமா என தெரியவில்லை.. முதலமைச்சர் , அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

மழை வெள்ள பாதிப்பை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறிய அவர்,  மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது வேதனையான சம்பவம் என்றும், ஸ்டாலின் அரசு 100 நாளில் செய்த சாதனை வீடுதோறும் நீர் தேங்கியதுதான்... ஸ்டாலின் விளம்பரம்தான்  தேடுகிறார் என்றும் முதலமைச்சரை எதிர்கட்சியின் மூத்தத் தலைவர் சாடினார்.

தனது உதவியாளரிடம் சோதனை நடத்துவதன் மூலம் அவப்பெயர் உண்டாக்க முயற்சிப்பதாக அரசு மீது குற்றம் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி, 2007ஆம் ஆண்டில் தான் சட்ட மன்ற உறுப்பினாராக இருக்கும் போதே வருமானத்துக்கு அதிகமாக  சொத்து சேர்த்ததாக கூறி தனது வீட்டில் சோதனை செய்தார்கள் என்றும், திமுக அரசு பழிவாங்கும் அரசாக உள்ளது" என்றும் கூறினார்.

Read Also | ஹெலிகாப்டரில் வெள்ள மீட்புப் பணி - அமைச்சர் அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News