உயிரே போனாலும் விதைநெல்லை உணவாக்கி உண்ணமாட்டார்கள், உழவர்கள்!

Significance of Uzhavar Thirunal: மழை பொய்த்து போனாலும்; எவ்வளவு பெரிய கொடிய பஞ்சம் வந்தாலும்; அதனால் உயிர் போகும் சூழல் ஏற்பட்டாலும்; உழவர்கள் விதைநெல்லை மட்டும் உணவாக்கி உண்ணமாட்டார்கள். 

Written by - Amarvannan R | Edited by - Sudharsan G | Last Updated : Jan 17, 2023, 06:47 AM IST
  • உழவர் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
  • உழவு தொழில் குறித்து திருக்குறளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரே போனாலும் விதைநெல்லை உணவாக்கி உண்ணமாட்டார்கள், உழவர்கள்! title=

Significance of Uzhavar Thirunal: தமிழர் திருநாளான பொங்கலையொட்டி  ஆண்டுதோறும் தைத் திங்கள் மூன்றாம்நாள் உழவர் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு உழவர்களின் தன்னலமற்ற சேவையே மூல காரணமாகும். 

உழவர்களுக்கு உயிரைவிட உயர்ந்தது, விதை நெல்தான். "நீரின்றி அமையாது உலகு" என்பதற்கேற்ப, விவசாயம் செய்வதற்கு உயிர் நாடியாக இருப்பது நீர்தான். ஆகமொத்தத்தில், நீர் ஆதாரத்துக்கு அடிப்படை தேவையாக இருப்பது மழைதான்.  அம்மழைதான் உணவு உற்பத்திக்கு மூலாதாரமாகும். 

இந்நிலையில் மழை பொய்த்து போனாலும்; எவ்வளவு பெரிய கொடிய பஞ்சம் வந்தாலும்; அதனால் உயிர் போகும் சூழல் ஏற்பட்டாலும்; விதைநெல்லை மட்டும் உணவாக்கி உண்ணமாட்டார்கள்; உழவர்கள். இது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பேருண்மையாகும். 

மேலும் படிக்க | சிறுமலை வன கிராமங்களில் விவசாயிகள் கொண்டாடிய ‘குதிரை பொங்கல்’

மேலும் உழவர்கள் தங்களது பசியை ஆற்றுவதற்காக மட்டுமின்றி; ஒட்டுமொத்த மனிதயினமும் பசியாறுவதற்காக தங்களது உழைப்பை முழுமையாக செலுத்துகிறார்கள். அவர்களது தன்னலமற்ற சேவையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டுதான், "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்றார் பாரதி. அதிலும்கூட உழவைதான் அவர் முன்நிறுத்தினார்.

வான்புகழ் கொண்ட வள்ளுவரோ, அதற்கும் ஒருபடி மேலாக, "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் ;மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" என  உழவர்களையும் உழவுத் தொழிலின் மேன்மையையும் திருக்குறள் வாயிலாக உலகறிய செய்தார். 

"உழவுத் தொழிலை செய்து அதனால் தாமும் உண்டு;  பிறர் பசியாற உணவளித்து சிறந்த வாழ்க்கை நடத்துபவரே உழவர்" என்றார் வள்ளுவர் பெருந்தகை. மேலும், உழவர் உழவுத் தொழிலை கைவிட்டுவிட்டால், பிற தொழிலை செய்பவர் யாராகிலும் அவர் விரும்பும் உணவை உண்ண வழியில்லாமல் போய்விடும் என்பதையும் அவர் பதிவுசெய்ய மறக்கவில்லை.

உழவுத் தொழில் இல்வையெனில், எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டேன் என்று கூறும் துறவிக்கூட,  துறவு நிலையை அடைய இயலாது போய்விடும் என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும். மேலும் உலகமெனும் தேருக்கு அச்சாணியாக இருப்பது உழவுத் தொழிலும் அத்தொழிலை முன்னெடுத்துச் செல்லும் உழவர்களும்தான் என்றால் அது மிகையாகாது!

"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்" என்றார் ஒளவை பிராட்டி.

மக்களின் பசி பிணியை போக்குவதே மன்னனின் தலையாயக் கடமையாகும். விவசாயம் நல்லமுறையில் நடந்தால்தான் நாடு செழிப்பாக இருக்கும். மக்களும் வயிறார பசியாறுவார்கள். நாடு செழிப்பாக இருந்தால்தான் நல்லாட்சி நிலவும். ஒரு நாட்டு மன்னனின் பெருமை, வரப்பு உயர்வதை பொருத்தே அமையும் என்பதுதான் ஒளவையாரின் ஆணித்தரமான கூற்று.

"ஏர்கொண்ட உழவனின்றி போர் செய்யும் வீரன் ஏது?"என்றார் கவியரசு கண்ணதாசன். "ஒவ்வொரு உழவரும் ஒரு போர் வீரனுக்கு சமமாவர்" என்றார் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி. பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட சாஸ்திரியின் கல்லறையில்கூட, "ஜெய் ஜவான், ஜெய் கிஷான்" என எழுதப்பட்டிருப்பது உழவுத் தொழிலின் மேன்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதாகும். அதுவே வரலாற்று உண்மையுமாகும்.

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்" என விவசாயி திரைப்படத்தில் இடம்பெற்ற
பாடல் வரியில் உழவர்கள் மற்றும் உழவுத் தொழிலின் அருமை - பெருமைகளுக்கு உயிர் கொடுத்திருப்பார், கவிஞர் மருதகாசி. 

அதற்கேற்ப, கடந்த சில ஆண்டுகளாக அயல்நாட்டில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளில் லட்சத்தில் சம்பளம் வாங்கிய நம் இளைஞர்கள் பலரும் அங்கு பணியாற்றிய வேலையை உதறி தள்ளிவிட்டு, தாய்நாட்டுக்குத் திரும்பி உழவுத் தொழில் எனும் இயற்கை விவசாயத்தில் மிக ஆர்வமாக ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது. 

நாடு விடுதலையடைந்த காலகட்டத்தில், நம் நாட்டின் பிரதமர் பதவிக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்ற கேள்வியை அன்றைய அரசியல் ஆர்வலர்கள், மகாத்மா காந்தியிடம் முன்வைத்தனர். அதற்கு அவர், "விவசாயத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், விவசாயிகளில் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்றால், அதுவே மிக பொருத்தமாக இருக்கும்" என பதிலுரைத்தார். இது வரலாறாகும்.

இதுபோன்று உழவுத் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்த ஆன்றோர்களும், சான்றோர்களும் பலருண்டு. உழவுத் தொழிலும் ஒரு சமூகத் தொண்டுதான். தனக்காக மட்டுமின்றி, பிறருக்காக உழைப்பவர்கள்தான் உழவர்கள்.  உழவுத் தொழில் செய்வதால் மட்டும் அவர்கள் உழவர்கள் ஆகவில்லை, ஊருக்காக உழைப்பதினால் மட்டுமே உழவர்கள் ஆனார்கள்.

வெயிலென்றும் மழையென்றும் பாராமல் உழைக்கும் உழவர்கள், "சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்" என்பதை  உழவர் திருநாளில் நினைவுகூர்ந்து, உழவர்களின் உன்னத சேவைக்கு தலைவணங்குவோம்.

மேலும் படிக்க | Alanganallur Jallikattu 2023 Live: களைகட்டும் காணும் பொங்கல்... அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News