ஓ.பி.எஸ்.க்கு கடும் பின்னடைவு! அதிமுக கட்சி சட்ட விதிகளை திருத்த தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Jun 22, 2022, 09:40 PM IST
  • பொதுக்குழுவில் கட்சியின் சட்ட விதிகளை திருத்த தடையில்லை
  • பொதுக்குழு விதிகளை திருத்துமாறு கோரும் வழக்குகளில் நீதிமன்றம் தலையிட முடியாது
  • அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஓ.பி.எஸ்.க்கு கடும் பின்னடைவு! அதிமுக கட்சி சட்ட விதிகளை திருத்த தடையில்லை - நீதிமன்றம் அதிரடி  title=

ஓ.பி.எஸ் vs இ.பி.எஸ்:

அதிமுகவின் ஒற்றைத் தலைமை யார் என்பது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது. கட்சிக்கு இரட்டை தலைமை போதும் ஒற்றைத் தலைமை வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் ,கட்சியின் 90% நிர்வாகிகள் தன் பக்கம் உள்ளதால் இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக மாற எடப்பாடி பழனிசாமி பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

இதனால் கடும் குழப்பமும் அதிருப்தியும் அடைந்த கட்சி தொண்டர்கள் அதிமுக பொதுக்கூழு கூட்டம் நடத்துவதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அடிப்படை உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தாக்கல் செய்த இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. இதில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்களின் வாதங்கள் பின்வருமாறு:-

ஓ.பி.எஸ் தரப்பு வாதம்: 

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 வரைவு தீர்மானங்களுக்கு நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது. ஒப்புதல் வழங்கப்பட்ட தீர்மானத்தில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் இல்லை. எனவே இந்த தீர்மானங்களை தவிர புதிதாக எந்த தீர்மானமும் பொதுக்குழுவில் சேர்க்கக்கூடாது. 

இ.பி.எஸ் தரப்பு வாதம்:

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளருக்கோ அதிகாரம் இல்லை. பொதுக்குழுவிற்கு தான் உச்சபட்ச அதிகாரம் உண்டு. எனவே, பொதுக்குழுவில் இது நடக்கும், அது நடைபெறாது என உத்திரவாதமாக கூற முடியாது. பொதுக்குழு எந்த முடிவையும் எடுக்கலாம். எந்த விதியையும் சேர்க்கவோ நீக்கவோ முடியும். எந்த அஜண்டாவும் இல்லாமல் தான் ஏற்கெனவே பொதுக்குழுக்கள் நடைபெற்றுள்ளன. அனைவரின் கருத்துக்கும் மதிப்பளிப்பது தான் ஜனநாயகம். 

மேலும் படிக்க | அதிகாரப் போட்டி! அரசியல் குழப்பம்! முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகுவாரா?

ஓ.பி.எஸ் தரப்பு வாதம்: 

பொதுக்குழுவில் கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பலாம் என எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விதிகளை காட்டுங்கள் பார்க்கலாம். 

இ.பி.எஸ் தரப்பு வாதம்:

விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதும். பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதிகக்கூடாது. இந்த மனுவே விசாரணைக்கு உகந்தது அல்ல. 

ஓ.பி.எஸ் தரப்பு வாதம்: 

கட்சியின் விதிகளை  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து மாற்றி அமைக்க அதிகாரம் உள்ளது. அனைத்தையும் முடிவு செய்யும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு உள்ளது என்பது சரியானது தான். ஆனால் அங்கு என்ன நடக்க வேண்டும் என முடிவு செய்வது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வழக்கமான பணிகள், பட்டியலிடப்பட்ட நிகழ்ச்சிகள் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் பொதுக்குழுவில் நடக்கலாம் என்ற மனநிலையில் செல்ல முடியாது. என்னென்ன நடக்கப்போகிறது என்பதை முழுமையாக தெரிந்துகொண்டே பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியும். ஒருங்கிணைப்பாளருக்கு தெரியமால் பொதுக்குழுவில் எந்த தீர்மானத்தையும் வைக்க முடியாது. கொடுத்த தீர்மானங்களை தவிர மற்ற தீர்மானங்களை நாளை கொண்டு வரக்கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் விதியில்லை. வெற்றிடம் ஏற்பட்டால் மட்டுமே மற்றொருவரை நியமிக்க முடியும்.

அதிரடி தீர்ப்பு:

பொதுக்குழுவுக்கு தடை கோரும் இந்த வழக்கு விசாரணை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த நிலையில் இரவு 9 மணிக்கு வெளியான தீர்ப்பில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவில் கட்சியின் சட்ட விதிகளை திருத்த தடையில்லை எனவும், பொதுக்குழு விதிகளை திருத்துமாறு கோரும் வழக்குகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சி விதிகளை திருத்த தடையில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதால் நாளை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | ஆப்கன் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 920 ஆக அதிகரிப்பு - மீட்பு பணிகள் தீவிரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News