‘இல்லம் தேடி வரும் ஆவின்’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

Last Updated : May 4, 2017, 05:17 PM IST
‘இல்லம் தேடி வரும் ஆவின்’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். title=

சென்னை கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமத்தில் போன் செய்தால் இல்லம் தேடி வரும் ஆவின் திட்டத்தை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-

''ஜெயலலிதா அரசின் பால் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறையின் சார்பில் இல்லம் தேடிவரும் ஆவின் திட்டத்தை இன்று தொடங்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.ஜெயலலிதா அரசின் கீழ் செயல்பட்டு வரும் பால் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை மற்றும் ஆவின் நிறுவனம் சிறப்பான முறையில் பால் கொள்முதல் செய்வதுடன் பால் மற்றும் பால் உப பொருட்களின் விற்பனையினையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆவின் நுகர்வோர் சேவையில்,மேலும் ஒரு மணிமகுடமாக, 18004253300 என்ற எண்ணுக்கு போன் செய்தால், பால் பொருட்களை இலவசமாக நுகர்வோர்களுக்கு டோர் டெலிவரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, இன்று தெற்காசிய விளையாட்டு குடியிருப்பு வளாகத்தில் இந்த இல்லம் தேடிவரும் ஆவின் சேவை துவங்கப்பட்டுள்ளது.

சென்னையில்அமைந்துள்ள 14 நவீன பாலகங்களில் இந்த சேவை விரைவில் துவங்கப்படும். சென்னையில் இணையத்தின் சார்பில் தினசரி 11.70 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் மொத்த விற்பனையாளர்கள் மூலம் விற்பனை 4 லட்சம் லிட்டர் பாலும், கார்டுதாரர்கள் மூலம் 7.10 லட்சம் லிட்டர் பாலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதர நிறுவனங்கள் மற்றும் ரொக்க பால் விற்பனை வாயிலாக 60 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஆவின் பாலகம், ஹைடெக் பாலகம், சில்லறை பால் விற்பனையாளர்கள் மற்றும் மொத்த பால் விற்பனையாளர்கள் மூலம் பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், பால்கோவா, மில்க் பேடா, தயிர், மோர், நறுமணப் பால், ஐஸ்கிரீம் வகைகள், லஸ்ஸி, சுடுபால், பால்பவுடர் ஆகியவைகள் மாதந்தோறும் ரூபாய் 18 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை மேலும் அதிகரித்து, மாதந்தோறும் ரூபாய் 20 கோடி அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையிலிருந்து இதர மாவட்டங்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பப்பட்டு, மாதந்தோறும் சுமார் ரூபாய் 1.25 கோடி அளவிற்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது. இதை மேலும் அதிகரித்து ரூபாய் 3 கோடி என்ற அளவினை எட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், ரூபாய் 45 கோடிசெலவில் ஐஸ்கிரீம் தயார் செய்யும் தொழிற்சாலை ஒன்று அமைக்க, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள பால் பவுடர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பால் பவுடரானது வெளிமாநிலங்களில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. அரை கிலோ மற்றும் ஒரு கிலோ அளவிலான பால் பவுடர் தமிழ்நாட்டில் மட்டும் சராசரியாக மாதம் ஒன்றிற்கு 3 ஆயிரத்து 500 கிலோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பால் பவுடர் சில்லறை விற்பனையை மேலும் அதிகரித்து, அதன்மூலம் கிடைக்கப் பெறும் கூடுதல் வருமானத்தினை கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் பெறும் வகையில்,19.04.2017 முதல் அரை கிலோ மற்றும் ஒரு கிலோ அளவிலான பால்பவுடரின் விற்பனை வெளி மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ளது.பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனையை மேலும் அதிகரிக்க ஜெயலலிதா அரசின் கீழ் செயல்பட்டுவரும் பால்வளத்துறையால் மேலும், சில சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது'' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

Trending News