உரிமைத் தொகை: பெண்களின் பொருளாதார தற்சார்பு

பெண் உரிமைக்காக போராடிய பெரியாரின் வழிவந்த, பெண் நலனுக்காக குரல் கொடுத்த கலைஞரின் வழி வந்த, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த ஆட்சி பெண்கள் நலனை என்றும் மறக்காது, மறுக்காது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 16, 2023, 01:44 PM IST
  • பொருளாதார சுயசார்பு என்பதை பெண் விடுதலையின் உச்சக்கட்டமாக கருதலாம்.
  • முதல்வரின் இந்த உதவித்தொகையால், பெண்களின் நிலை மேம்படும் என்பதில் ஐயமில்லை.
  • அரசின் தொலைநோக்குப் பார்வையை மக்கள் நன்றியுடன் பாராட்டி வருகிறார்கள்.
உரிமைத் தொகை:  பெண்களின் பொருளாதார தற்சார்பு title=

பெண்கள் நாட்டின் கண்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நாட்டின் கண்களாக இருக்கும் பெண்கள் வீட்டை பொறுத்தவரை உயிர் நாடியாகவே இருக்கிறார்கள். ஒரு குடும்பம் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் முதலில் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும். 

பெண்களுக்கு எது மகிழ்ச்சி? எது அவர்களுக்கு நிம்மதியை தரும்? புடவையும் நகையுமா? பண்ட பாத்திரங்களா? வீடு வாய்க்கால்களா? இவை அனைத்தும் இருக்கலாம், இவை இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அன்றாட தேவைகளுக்கு கூட பிறர் கையை நாடாமல் இருக்கும் பொருளாதார தற்சார்பு நிலை அளிக்கும் மகிழ்ச்சி, நிம்மதி, தைரியம், இவற்றுக்கு ஈடு இணை கிடையாது. தன்னால் முடியும் என்ற தற்சார்பு நிலைதான் பெண்களுக்கு உறுதியை அளித்து ஒளியை கொடுக்கிறது. யார் கையையும் எதிர்பார்க்க வேண்டாம் என்ற நிம்மதிதான் தயக்கத்தை அகற்றி தைரியத்தை அளிக்கின்றது. நான் நினைத்தாலும் நடக்கும் என்ற நம்பிக்கைதான் பிறரை சார்ந்திருந்த பெண்களை, பிறர் சார்ந்திருக்கும் நிலைக்கு உயர்த்துகிறது. 

பொருளாதார சுயசார்பு என்பதை பெண் விடுதலையின் உச்சக்கட்டமாக கருதலாம். ஆண்கள் வீட்டுச்செலவுக்காக கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அதிசயம் செய்பவர்கள் பெண்கள். தற்போது இவர்களுக்கு மாதா மாதம் ஒரு ஊக்கத்தொகை கூடுதலாக வந்தால், அவர்கள் பல மாயங்களையே செய்து காட்டுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இதுமட்டுமல்ல, பெண்களின் வாழ்க்கை பல வித உயர்வு தாழ்வுகளை கொண்டுள்ளது. வீடே இவர்களால்தான் இயங்குகிறது என வெளியே நாம் பேசிக்கொண்டாலும், பல வீடுகளில் இவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை நாம் கண்டுகொள்ளாமல் சென்று விடுகிறோம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த உதவித்தொகை ஒரு மருந்தாய் உதவும் என்று கூறினால் அது மிகையாகாது. 

மேலும் படிக்க | கலைஞர் பெண்கள் உரிமைத் தொகைக்கு இனி விண்ணப்பிக்க முடியுமா?

வெளிப்படையாக ஆண்கள் பெண்களை விட பலசாலிகளாக தெரிந்தாலும், உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண்கள் எப்போதும் ஒரு அடி முன்னேதான் நிற்கிறார்கள். இவர்களுக்கு பொருளாதார தற்சார்பு நிலையும் கிடைத்தால், இவர்களால் முடியாதது  எதுவும் இருக்க முடியாது. 

பெண் விடுதலை, பெண் சமத்துவம் என இவற்றுக்காக பலர் குரல் மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்கும் இவ்வேளையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அந்த குரலுக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' மூலம் உருவம் கொடுத்துள்ளார். முதல்வரின் இந்த உதவித்தொகையால், பெண்களின் நிலை மேம்படும் என்பதில் ஐயமில்லை. வீட்டின் அச்சாணியாக இருந்துகொண்டும் தனது தேவைகளுக்கு பிறர் கையை எதிர்பார்த்து காத்திருந்த பெண்களின் நிலை இனி மாறிவிடும். இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு இனி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள ஒரு வழி கிடைக்கும். 

பெண் உரிமைக்காக போராடிய பெரியாரின் வழிவந்த, பெண் நலனுக்காக குரல் கொடுத்த கலைஞரின் வழி வந்த, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த ஆட்சி பெண்கள் நலனை என்றும் மறக்காது, மறுக்காது. அனைவரின் நலனிலும் அக்கறை காட்டும் இந்த அரசு நாட்டின் கண்களான பெண்களை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமா? பொறுப்பின் சிகரங்காளாகத் திகழும் பெண்களுக்கு உரிமைத்தொகையை அளித்து, அதன் மூலம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் முன்னேற்ற திட்டம் தீட்டிய இந்த அரசின் தொலைநோக்குப் பார்வையை மக்கள் நன்றியுடன் பாராட்டி வருகிறார்கள்.

பல வித இன்னல்களுக்கு மத்தியிலும், சிரித்த முகத்துடன் சிலிர்க்க வைக்கும் திறனுடன், சிந்திக்க வைக்கும் பக்குவத்துடன், சில்வண்டு போன்ற சுறுசுறுப்புடன் பெண்கள் ஒவ்வொரு நாளும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பெண்மை மென்மைக்கு மட்டும் உதாரணம் அல்ல, திண்மைக்கும் எடுத்துக்காட்டு. பெண்களில் பொறுமை மட்டும் இருப்பதில்லை, கூர்மையும் குடிகொண்டுள்ளது. இந்த அனைத்து திறமைகளும் சரியாக வெளி வர ஒரு பாதை கிடைத்தால், ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்தை உயர்த்திக்காட்டுவாள். அதற்கு பெண்களுக்கு தற்சார்பு நிலை ஏற்படுவது மிக முக்கியம். பொருளாதார ரீதியாக ஒரு பெண் வலுப்பெற்றால், அது அவரது குடும்பத்திப் பண பிரச்சனையை மட்டும் தீர்க்காது, மாறாக ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தையுமே அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும். 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' மூலம் பெண்களுக்கு கிடைக்கும் இந்த உரிமைத்தொகையானது பெண்களுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தின் வளர்ச்சிக்கே ஒரு ஏணிப்படியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க | “எங்க பாதி பிரச்சனை தீர்ந்துடும்" மகளிர் உரிமைத் தொகைக்கு குவியும் வரவேற்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News