தமிழகத்தின் தவப்புதல்வன்: கர்மவீரர் காமராஜர்

காமராஜர் பொற்கால ஆட்சி தந்த பொக்கிஷம், இலவச மதிய உணவளித்த அட்சய பாத்திரம், இலவச கல்வி அளித்த படிக்காத மேதை, தன்னலம் கருதா அரசியல் ஆச்சரியம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்த கர்ம வீரர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2021, 06:01 PM IST
  • காமராஜர் தனது 16 ஆவது வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து ஆரசியல் பிரவேசம் செய்தார்.
  • தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நன்மதிப்பும் பேராதரவும் கிடைக்க மிக முக்கிய காரணமாக இருந்தவர் காமராஜர்.
  • தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காகவும், அர்ப்பணித்த காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் இயற்கை எய்தினார்.
தமிழகத்தின் தவப்புதல்வன்: கர்மவீரர் காமராஜர் title=

“பாரோர் பலருள் சீரோர் சிலரே, சீரோர் சிலரில் சீலர் இவரே” என்ற வாக்கினிற்கேற்ப உலகில் பிறந்த பல மாமனிதர்களில் கர்மவீரர் காமராஜரும் ஒருவர். 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி விருதுநகரின் விருதாக பிறந்த அவர் மனிதகுலத்தின் விழுதாக வாழ்ந்து காட்டினார்.

குமாரசுவாமி நாடார், சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்த காமராஜர் சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். 

அரசியல் பிரவேசம்

தனது 16 ஆவது வயதில் காங்கிரஸ் கட்சியில் (Congress Party) சேர்ந்து ஆரசியல் பிரவேசம் செய்தார். துணிக்கடையில் பணிபுரிந்து வந்தாலும், பொது வாழ்க்கையிலும் மக்கள் சேவையிலும் எப்போதும் அவரது மனம் ஈடுபட்டது. ராஜாஜி, வரதராஜ நாயுடு போன்றவர்களின் பேச்சால் ஈர்க்கப்படு அரசியலிலும் சுதந்திர போராட்டங்களிலும் ஈடுபட ஆரம்பித்தார்.  
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். 1954 ஆம் ஆண்டு காமராஜர் தமிழக முதல்வரானார் . 

தமிழக காங்கிரசின் தூண்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நன்மதிப்பும் பேராதரவும் கிடைக்க மிக முக்கிய காரணமாக இருந்தவர் காமராஜர். முதல்வராக அவர் செய்த பணிகளும், அவர் கொண்டு வந்த நலத்திட்டங்களும் தொலைநோக்கு பார்வையுடன் செய்யப்பட்டவை என கூறினால் அது மிகையாகாது. 

கல்வி விளக்கை ஏற்றி வைத்த கர்மவீரர்

தான் படிக்காவிட்டாலும், வரும் தலைமுறைக்கு படிப்பில் எந்த குறையும் இருக்கக்கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் கல்வி கற்க 30000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை தொடக்கினார். 

இலவச மதிய உணவுத் திட்டம்

பள்ளிகளை துவக்கியாகி விட்டது. இனி மாணவர்களை எவ்வாறு வரவழைப்பது என அவர் யோசித்த போது அவர் மனதில் உதித்த சிந்தனைதான் ‘இலவச மதிய உணவுத் திட்டம்’. கல்விக்காக இல்லாமல் போனாலும், வறுமையில் வாடும் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றால் ஒரு வேளை உணவு கிடைக்குமே என்ற எண்ணத்திலாவது பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என அவர் எண்ணினார். அந்த எண்ணம் நூறு சதவிகிதம் உண்மையானது. 7% ஆக இருந்த மாணவர்களின் வருகை 37% ஆனது. உடலுக்கு உணவளித்து வாழ்க்கைக்கு கல்வி அளித்து மாணவர்களுக்கும் வறுமைக்கும் இடையில் ஒரு சுவராக நின்றார்.

ALSO READ: பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை - பள்ளிக்கல்விதுறை அமைச்சர்

காமராஜர் - கிங் மேக்கர்

அவரது வாழ்க்கை முறையும் எளிமையும் கட்சியிலும், வெளியிலும் அனைவரையும் அவரை மரியாதையுடன் காண வைத்தது. ஜவஹர்லால் நேரு மரணமடைந்தவுடன், லால் பகதூர் சாஸ்திரியை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். 1966 –ல் சாஸ்திரியின் திடீர் மரணத்திற்குப் பிறகு, நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்திய பிரதமராக்கினார்.

யாருக்கு எந்த பொறுப்பை அளித்தால், அந்த பணி சிறப்பாக நடக்கும் என கணிப்பதில் காமராஜரை மிஞ்ச ஆளில்லை என்றுதான் கூற வேண்டும். எந்த பதவிக்கு எப்படிப்பட்ட ஆளுமை தேவை என்பதை பார்த்து அவர் பொறுப்புகளை பிரித்துக் கொடுப்பதில் வல்லவர். சரியான சமயத்தில் நாட்டிற்கு சாதகமான சரியான தலைவர்களை தலைமைப் பொறுப்பில் அமர வைத்ததால், அவர் அனைவராலும் ‘கிங் மேக்கர்’ என பாராட்டப்பட்டார்.

நாட்டு மக்களை தன் குடும்ப உறுபினர்களாக எண்ணிய காமராஜர் (Kamarajar) பல ஏழைப் பெண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி, பல குடும்பங்கள் செழிக்க வழி செய்தார் என்பதை சொல்லத் தேவையில்லை. அதற்கு சரித்திரம் சான்று.

பாரத் ரத்னா காமராஜர்

தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காகவும், அர்ப்பணித்த காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் இயற்கை எய்தினார். அடுத்த ஆண்டு, இந்திய அரசின் உயரிய விருதான பாரத் ரத்னா அவருக்கு அளிக்கப்பட்டது.

கர்ம வீரர் காமராஜரையும் அரசியல் சாத்தான் ஆட்டிப்பார்க்காமல் விடவில்லை. சில அரசியல் பெருச்சாளிகளுக்கு அவர் உறுத்தலாக இருந்தார். அரசியலில் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு காமராஜர் தடையாக இருந்தார். எதைப் பற்றியும் கவலைப் படாமல் தன் கடைமையை செய்தார் காமராஜர். இருப்பினும், பலர் அவரை பல சூழ்ச்சிகள் செய்து அகற்ற முயன்றனர். காமராஜரின் உதவியால் முன்னுக்கு வந்த சிலரும் இவை அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்தனர்.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தபோதும், இறுதிவரை அவர் வாடகை வீட்டிலேயே இருந்தார். அவர் தனக்காக சேர்த்த சொத்து, சில கதர் வேட்டிகள், சட்டைகள் மற்றும் புத்தகங்கள். இப்படிப்பட்ட மாமனிதரை இனி சரித்திரம் காணுமா?

காமராஜர் பொற்கால ஆட்சி தந்த பொக்கிஷம், இலவச மதிய உணவளித்த அட்சய பாத்திரம், இலவச கல்வி அளித்த படிக்காத மேதை, தன்னலம் கருதா அரசியல் ஆச்சரியம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்த கர்ம வீரர். அவர் புகழ் இந்த உலகுள்ளவரை நீங்காமல் இருக்கும் என்பது திண்ணம்!!  

ALSO READ: கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாள்; தலைவர்கள் புகழாஞ்சலி! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News