கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாள்; தலைவர்கள் புகழாஞ்சலி!

தமிழகத்தில் சுமார் 23 ஆயிரம் பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த தினம் இன்று. அந்த படிக்காத மேதை காமராஜரின் பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 15, 2021, 12:26 PM IST
  • காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
  • பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைத்திட்டங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தான் இன்றளவும் விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ளது
கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாள்; தலைவர்கள் புகழாஞ்சலி! title=

தமிழகத்தில் சுமார் 23 ஆயிரம் பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த தினம் இன்று. அந்த படிக்காத மேதை காமராஜரின் பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

வறுமை காரணமாக யாரும் கல்வி பயிலாமல் இருக்க கூடாது என்பதற்காக கல்வியை இலவசமாக வழங்கியதோடு, மாணவர்களுக்கான  மதிய உணவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இதனால்  பதவியேற்ற முதல் ஐந்தாண்டுகளிலேயே தமிழகத்தின் கல்வி கற்றோரின் எண்ணிக்கை, 7 சதமிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக உயர்ந்தது.

தமிழகத்தின் முதல்வராக மூன்று முறை இருந்தபோதும், இறுதிவரை வாடகை வீட்டிலேயே வசித்தவர் கர்மவீரர் காமராஜர். 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி அவர்  இறந்த போது அவரிடம் இருந்த சொத்துக்கள் சில கதர் வேட்டி சட்டைகள், 150 ரூபாய் பணம் மட்டுமே.

மேலும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைத்திட்டங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தான் இன்றளவும் விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ளது என்றால் மிகையில்லை. 

மேலும், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம், கல்பாக்கம் அணு மின்நிலையம், திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், கிண்டி டெலி பிரிண்டர் தொழிற்சாலை, சேலம் இரும்பு உருக்கு ஆலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை  உள்ளிட்ட பல்வேறு தொழில் திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்து தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

இந்நிலையில் படிக்காத மேதை காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்த அறிவிப்பில், “கல்வியும், வேளாண்மையுமே நாட்டை வளர்ச்சி பாதையில் பெருமை அடைய செய்யும் எனும் தனது தொலைநோக்கு பார்வையால் எண்ணற்ற பள்ளிகளும், அணைகளும் தந்து தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்த பெருமைக்குரியவர், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்,” என தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கொடி பிடிக்கும் அடிப்படைத் தொண்டனாய் இருந்து தன்னலமற்ற தன் உழைப்பினால் கொடி கட்டி ஆளும் முதலமைச்சராக ஆனவரும், “கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வண்ணம் தமிழகத்தில் கல்விப் புரட்சியை உருவாக்கியவருமான, கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு என் மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” தெரிவித்துள்ளார்.

இதேபோல, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஏழைகளுக்கு மறுக்கப்பட்ட கல்வியை மீட்டெடுத்துக் கொடுத்து, படிக்கும் சமுதாயத்தை அமைக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்த மாபெரும் மக்கள் தலைவரை இந்த நன்னாளில் வணங்குவோம்…. போற்றுவோம்!. கல்வியில் சிறந்த தமிழகத்தை அமைக்க வேண்டும் என்பது தான் காமராஜரின் நோக்கம். கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் கொள்கை. இவை இரண்டும் நிறைவேற வேண்டும்!” எனக் கூறியுள்ளார்

Trending News